கற்பிட்டி – தில்லையடி கடற்கரைப் பகுதியில் கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 1,038 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.
வடமேல் கடற்படை கட்டளைக்கு உட்பட்ட ‘எஸ்.எல்.என்.எஸ் விஜய’ முகாம் உத்தியோகத்தர்களால் நேற்று (22) இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கடற்கரையோரத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த 26 சந்தேகத்திற்கிடமான உர மூட்டைகளை கடற்படையினர் கைப்பற்றினர். அவற்றைச் சோதனையிட்ட போதே இந்த உலர்ந்த மஞ்சள் தொகுதி கண்டறியப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மஞ்சள் தொகுதி, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.



