தம்புள்ளையிலிருந்து ஆரம்பித்த நடைப்பயணத்தில் பௌத்த பிக்குகளுடன் இணைந்து வரும் ஆலோகா நாய், பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில், மாத்தளை பகுதியில் நடைபயணம் சென்றபோது பலரும் நாயுடனும் பிக்குகளுடனும் செல்பி எடுக்கவும், வீடியோ எடுக்கவும் முண்டியடித்தனர்.
இந்தக் கட்டுக்கடங்காத கூட்டத்தால் நடைபயணம் மேற்கொள்வதில் பெரும் தாமதமும், நிர்வாக ரீதியான சிக்கல்களும் ஏற்பட்டதாக சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் கே.டி. லால்காந்தா பங்கேற்ற கூட்டத்தில் பேசிய அதிகாரி, நிலைமையைக் கட்டுப்படுத்த நாட்டின் மிக உயர்மட்ட அதிகாரிகள் தலையிட வேண்டியிருந்ததாகக் குறிப்பிட்டார்.
கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி செயலாளர் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இரண்டு முறை வட்ஸ்அப் குழு அழைப்புகள் மூலம் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு ஆலோசனை வழங்கியுள்ளனர்.
அமைதி நடைபயணத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வண்ணம் பாதுகாப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
வணக்கத்திற்குரிய பன்னாகர தேரோ தலைமையிலான இந்த “ஏஹி பஸ்ஸிகோஅமைதி நடைபயணம்”, தற்போது மருத்துவ சிகிச்சைக்குப் பின் தேறிவரும் ‘ஆலோகா’ நாயுடன் தொடர்ந்து கண்டி நோக்கி நகர்ந்து வருகிறது.
தங்களது அன்பை வெளிப்படுத்தும் போது, ஊர்வலத்தில் செல்லும் பிக்குகளுக்கும் விலங்குகளுக்கும் இடையூறு விளைவிக்காமல் இருக்குமாறு பாதுகாப்புத் தரப்பினர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



