திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் அரசமுறை கடன்தொகை கணினி ஊடுருவல் ஊடாக மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதியமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும். அதேபோல் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷ சூரியபெருமவும் பதவி விலக வேண்டும்.அப்போது தான் சுயாதினமாக விசாரணைகள் இடம்பெறும் என்ற நம்பிக்கை தோற்றம் பெறும் என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்தார்.
கொழும்பில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
திறைசேரியினால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் அரசமுறை கடன் நிதி கணினி ஊடுருவலால் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஊழலுக்கு எதிராக செயற்படுவதாக குறிப்பிடும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஊழல் மோசடிக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளார்.
நாட்டின் முக்கிய பதவிகளில் திறைசேரியின் செயலாளர் பதவி மிகவும் முக்கியமானது. தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு பிரவேசித்த ஹர்ஷ சூரியபெருமவை திறைசேரியின் செயலாளராக நியமித்தமை முற்றிலும் தவறானதொரு செயற்பாடாகும்.
முன்னாள் திறைசேரியின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றதைத் தொடர்ந்து திறைசேரியில் பதவி தரப்படுத்தலில் அடுத்த நிலையில் இருந்தவரை திறைசேரியின் செயலாளராக ஜனாதிபதி நியமித்திருக்க வேண்டும்.ஆனால் அதனைத் தவிர்த்து தனது அரசியல் நண்பரான ஹர்ஷ சூரிய பெருமவை திறைசேரியின் செயலாளராக நியமித்தார்.
ஹர்ஷ சூரியபெரும அவுஸ்ரேலியாவில் வாழ்ந்தவர். அங்கு தனியார் நிறுவனத்தில் தொழில் புரிந்தார்.திறைசேரியால் செலுத்தப்பட்ட 2.5 மில்லியன் டொலர் அவுஸ்ரேலிய நபரால் மோசடி செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு ஏற்றுக்கொண்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்று 03 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையும் இதனை வெளிப்படுத்தவில்லை. மாறாக மூடிமறைத்துள்ளது. இந்த சம்பவம் குறித்து பாராளுமன்ற மட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு சபாநாயகருக்கு எழுத்துமூலமாக வலியுறுத்தினோம்.இருப்பினும் அவரும் அதனை பொருட்படுத்தப்படவில்லை. அரசாங்கம் அலட்சியமாக செயற்பட்டதால் தான் நாட்டு மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்தினோம்.
இந்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமாயின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதியமைச்சு பதவியில் இருந்து விலக வேண்டும். அதேபோல் திறைசேரியின் செயலாளர் ஹர்ஷ சூரியபெருமவும் பதவி விலக வேண்டும்.அப்போது தான் சுயாதினமாக விசாரணைகள் இடம்பெறும் என்ற நம்பிக்கை தோற்றம் பெறும் என்றார்.



