தமிழர்களுக்கான அரசியல் தீர்வு குறித்து ஆராய்வதற்காக தமிழ்த்தேசியப்பேரவையினால் மாற்றுக்குழுவொன்று முன்மொழியப்பட்டிருப்பதானது தமிழ் சட்டத்தரணிகள் பேரவை முன்னெடுத்துவரும் ஒற்றுமை முயற்சியைப் பாதிக்கும் என ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கவலை வெளியிட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கான தீர்வு மற்றும் அரசியலமைப்பு உருவாக்கம் ஆகிய விவகாரங்களில் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளை ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டுவரும் நோக்கில் தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் கடந்த மார்ச் 2 ஆம் திகதி மற்றும் இம்மாதம் 9 ஆம் திகதிகளில் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு சந்திப்புக்களில் தமிழ்த்தேசியக் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்ததுடன், அவர்களுக்கு இடையில் பொது இணக்கப்பாடுகளும் எட்டப்பட்டன.
இருப்பினும் தமிழ்த்தேசியப் பேரவையினால் கடந்த பெப்ரவரி 15 ஆம் திகதி நடாத்தப்பட்ட கூட்டத்தின் பிரகாரம் இனப்பிரச்சினைக்கான தீர்வாக தமிழர் தரப்பின் நிலைப்பாட்டினைக் கூட்டாக முன்வைப்பதற்கான தீர்வுத்திட்ட வரைவைத் தயாரிப்பதற்கும், அதனுடன் தொடர்புடைய செயற்பாடுகளை முன்னெடுத்துச்செல்வதற்கும் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப்பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் உள்ளிட்ட 28 பேரடங்கிய ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபை வழிநடத்தல் குழுவை நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டு ஈழத்தமிழர் அரசியலமைப்பு நிர்ணயப் பொதுச்சபையின் ஒருங்கிணைப்பாளர் கலாநிதி தி.விக்னேஸ்வரனால் கடந்த 17 ஆம் திகதி அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.
இதுபற்றிக் கருத்துரைத்த ரெலோவின் பாராளுமன்றக்குழுத்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், தமிழ்த்தேசியப்பேரவையின் அண்மைய நடவடிக்கை தமிழ் சட்டத்தரணிகள் பேரவையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் ஒற்றுமை முயற்சியைப் பாதிக்கும் எனச் சுட்டிக்காட்டினார்.
தமிழ்த்தேசியக் கட்சிகள் ஒற்றுமையுடன் செயற்படவேண்டும் என்பதையே தமிழ் மக்கள் விரும்புகின்றார்கள். அதேபோன்று தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒற்றுமைப்படுத்தி புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படவேண்டிய அரசியல் தீர்வு குறித்த வரைவைத் தயாரிப்பதற்கே தமிழ் சட்டத்தரணிகள் பேரவையும் விரும்புகின்றது.
அவ்வாறிருக்கையில் தமிழ்த்தேசியப்பேரவை மாற்றுக்குழுவொன்றை முன்மொழிவது ஒற்றுமைக்கு வித்திடாது' என்றும் அவர் கவலை வெளியிட்டார்.
மேலும் இன்றளவிலே வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அபாயகரமான சூழ்நிலையொன்று உருவாகியிருப்பதாகவும், இவ்வேளையில் தமிழ்த்தேசியக்கட்சிகள் ஒன்றுபடாவிடின் வட, கிழக்கு மாகாணங்கள் வேறு தரப்பினரின் கைகளுக்குள் செல்லும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் எச்சரித்தார்.





