கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் கீழுள்ள ஊர்வணிகன்பற்றுக் கிராமத்தில் பல தலைமுறைகளாக மக்கள் வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்களை இராணுவத் தேவைக்காக நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவசர கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் திங்கட்கிழமை (27.04.2026) ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஊர்வணிகன்பற்றுக் கிராமமானது மிக நீண்டகால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டதுடன் பல தலைமுறைகளாகத் தமிழ்மக்கள் தமது பூர்வீக வாழ்விடமாகப் பேணி வந்த நிலமாகும். யுத்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2010 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மக்களின் விருப்பத்துக்கு மாறாக இலங்கை இராணுவத்தினால் இக் காணிகள் கையகப்படுத்தப்பட்டதுடன் இன்றுவரை மக்கள் தமது சொந்த நிலங்களுக்குள் நுழைய முடியாத துர்ப்பாக்கிய நிலையே நீடிக்கின்றது. தற்போது இராணுவத்தின் 4 ஆவது பட்டாலியன் மின் மற்றும் இயந்திரப் பொறியியல் படையணி அமைப்பதற்காகச் சுவீகரிக்கப்படவுள்ள முப்பது ஏக்கர் நிலப் பரப்பானது 20 தனிப்பட்ட உரிமையாளர்களுக்குச் சொந்தமானதாகும். இவ்விடத்திலேயே மக்களின் வாழ்விடங்கள், வாழ்வாதாரப் பயிர்ச் செய்கைகள் மற்றும் அவர்களது கலை, கலாசார விழுமியங்களுடன் ஒன்றிய முத்துமாரி அம்மன் ஆலயம், பொதுநோக்கு மண்டபம், சிறுவர் முன்பள்ளி உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களும், சமூகக் கட்டமைப்புக்களும் அமைந்துள்ளன.
தமது பூர்வீக அடையாளங்கள் அனைத்தையும் கொண்ட இந்த நிலத்தை நிரந்தரமாகச் சுவீகரிக்கும் நோக்கில் கடந்த 2026.04.02 அன்று இராணுவத்தினால் நில அளவீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படவிருந்தன. எனினும், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்களின் தன்னெழுச்சியான எதிர்ப்புப் போராட்டங்கள் காரணமாக இப் பணிகள் அன்றைய தினமே இடைநிறுத்தப்பட்டது.
இவ் விடயத்தின் பாரதூரமான தன்மையைக் கருத்திற் கொண்டு கடந்த 2026.04.07 அன்று என்னால் நாடாளுமன்றத்தில் சபையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் குமுறல்களையும் சபையில் பதிவு செய்திருந்தேன். தொடர்ந்து அன்றையதினம் மாலை-02 மணிக்குத் தங்களின் தலைமையில் பாராளுமன்றக் குழு அறை- 01 இல் நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுத் தொடர்பான அமைச்சு சார் ஆலோசனைக் கூட்டத்திலும் இக் காணி விடயம் தொடர்பில் தங்களுக்குத் தெளிவாக விளக்கப்படுத்தப்பட்டிருந்தது. “மக்களின் நிலம் மக்களுக்கே” என்ற உயரிய கொள்கையின் அடிப்படையில் நின்றும், மக்களின் நலன் சார்ந்தும் செயற்பட்டு வரும் தாங்கள் தமிழ்மக்களின் இப் பூர்வீக சொந்த நிலத்தை விடுவிப்பீர்கள் என்ற மிகுந்த நம்பிக்கையினை மக்கள் கொண்டுள்ளனர். தமது சொந்த நிலங்களை இழந்து தற்போது வாழ்வாதாரத்துக்காகக் கையேந்தி நிற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள இம் மக்களுக்கு அறத்தின் பாற்பட்ட நீதி வழங்கப்பட வேண்டும் என்பது எமது எதிர்பார்ப்பாகும்.
எனவே, இக் காணிகளின் பூர்வீக உரிமையாளர்களான தமிழ்ப் பொது மக்களின் நிலங்களை வலுக்கட்டாயமாகச் சுவீகரிக்க எடுக்கும் முயற்சியைத் தடுத்து நிறுத்திக் காணியின் உண்மையான உரிமையாளர்களான தமிழ்ப் பொதுமக்களிடமே இக் காணியினை வழங்க ஏற்பாடு செய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





