தமிழ்க் கல்விக் கழகத்தின் நிருவாகப் பொறிமுறைக்கமைய 36ஆவது அகவை நிறைவு விழா ஐந்து மாநிலங்களில் அணியமாகித் திட்டமிட்டவாறு நடைபெற்று வருகின்றது. தென்மாநிலத் தமிழாலயங்களுக்கான அரங்கம் ஸ்ருற்காட் நகரிலே அணிசெய்ய 25.04.2026 சனிக்கிழமை அகவை நிறைவு விழா நடைபெற்றது. கதிரோனின் ஒளிபரவிய காலைப்பொழுதில் கிறித்துவ சனநாயகக் கட்சியின் ஸ்ருற்காட் நகரசபை உறுப்பினரான திரு. கிளவ்ஸ் வெங் அவர்கள் பொதுச்சுடர் ஏற்றிட விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினர், வெற்றியாளர் மற்றும் மதிப்பளிப்பைப் பெறவந்த அறப்பணியாளர் ஆகியோரைத் தமிழினத்தின் பண்பாடு தழுவிப் பன்னீர் தெளித்துச் சந்தனப் பொட்டிட்டு வாழ்த்திசைப்பாவுடன் அரங்கினுள் அழைத்துவரப்பட்டனர். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் யேர்மனியக் கிளைப் பொறுப்பாளர் திரு. யோன்பிள்ளை சிறிரவீந்திரநாதன், கிறித்துவ சனநாயகக் கட்சியின் (CDU) ஸ்ருற்காட் நகரசபை உறுப்பினரான திரு. கிளவ்ஸ் வெங், ஸ்ருற்காட் சிறீசித்தி விநாயகர் ஆலயப் பிரதமகுரு சிவசிறீ விஸ்வநாத உமாமகேஸ்வர சர்மா, யேர்மன் தமிழ்ப் பெண்கள் அமைப்பின் பொறுப்பாளர் திருமதி வசந்தி மனோகரன், தமிழ் இளையோர் அமைப்பின் துணைப்பொறுப்பாளர் செல்வி வானதி நிர்மலதாசன், தமிழ்க் கல்விக் கழகத்தின் நிதிப்பிரிவுப் பொறுப்பாளர் தமிழ் மாணி’ திருமதி மோகனேஸ்வரி குணாளன், பரப்புரைப்பிரிவுப் பொறுப்பாளர் திரு. தர்மலிங்கம் தீபன், ஸ்ருற்காட் சிறீசித்தி விநாயகர் ஆலயப் பொறுப்பாளர் திரு. சின்னையா மகேஸ்வரன், தமிழ்க் கல்விக் கழகத்தின் தென்மாநிலச் செயற்பாட்டாளர்களான தமிழ் வாரிதி திருமதி பிரமிளா சுரேஸ்குமார் மற்றும் திருமதி சங்கீதா லோகேந்திரன் ஆகியோர் மங்கலவிளக்கினை ஏற்றினர். அகவணக்கம், தமிழாலயப்பண் என்பவற்றையடுத்து, தமிழ்க் கல்விக் கழகப் பொறுப்பாளர் செம்மையாளன்’ திரு. செல்லையா லோகானந்தம் அவர்கள் வரவேற்புரையாற்றினார். வரவேற்புரையை யேர்மன் மொழியில் செல்வி காருண்யா நவராசா வழங்கினார்.
5,10,15 ஆண்டுகள் அறப்பணியாற்றிய ஆசிரியர்கள் மற்றும் நிருவாகிகள் மதிப்பளிக்கப்பட்டதோடு, 20, 25 மற்றும் 30 ஆண்டுகள் அறப்பணியாற்றியவர்களை மண்டப வாசலில் சந்தனமாலை அணிந்து இசையுடன் அனைவரும் எழுந்துநின்று அரங்கிற்கு அழைத்துவந்து பன்னீர் தெளித்துச் சந்தனப்பொட்டிட்டு வரவேற்றனர். 20, 25 ஆண்டுகள் அறப்பணியாற்றியோருக்கு முறையே ஷதமிழ் வாரிதி’ மற்றும் தமிழ் மாணி’ என்ற சிறப்புப் பட்டமும் 30ஆண்டுகள் அறப்பணியாற்றிய இருவருக்கு மூன்று உடுக்கள் பதிக்கப்பட்ட சிறப்புச் சின்னம் அணியப்பட்டு மதிப்பளிக்கப்பட்டது.
தமிழ்மொழிப் பொதுத்தேர்வு மற்றும் தமிழ்த்திறன் போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களுக்கான மதிப்பளிப்பும் தமிழ்மொழிப் பொதுத்தேர்வில் முதலாமிடத்தைப் பெற்றுக்கொண்ட முன்சன் தமிழாலயம், தமிழ்த்திறன் போட்டியில் நாடுதழுவிய மட்டத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முதலாமிடத்தைப் பெற்று மாமனிதர்’ இரா. நாகலிங்கம் விருதினை இரண்டாவது தடவையாகத் தமதாக்கிக் கொண்டனர். தமிழ்த்திறன் போட்டியில் இரண்டாம் நிலையைப் பெற்றுக்கொண்ட நூர்ன்பேர்க் தமிழாலயத்திற்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது. கலைத்திறன் போட்டியில் மாநில மட்டத்தில் முதல் மூன்று நிலைகளைப் பெற்ற ஸ்ருற்காட், முன்சன், நூர்ன்பேர்க் ஆகிய தமிழாலயங்களுக்கும் நாடுதழுவிய மட்டத்தில் இரண்டாம் நிலையைப் பெற்ற ஸ்ருற்காட் தமிழாலயத்துக்கான மதிப்பளிப்பும் இடம்பெற்றது.
மதிப்பளிப்புகள், வாழ்த்துரைகள், உரை, கவிதை, விடுதலைப்பாடல்கள் மற்றும் விடுதலை நடனங்களோடு விரிந்த அரங்கில் 14 ஆண்டுகள் தமிழாலயங்களோடு இணைந்து பயணித்து 12ஆம் ஆண்டுத் தேர்வில் சித்தியடைந்து விடைபெறும் மாணவர்கள் மகாகவி பாரதியாரின் ‘தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும். என்ற அறைகூவலோடு தமக்கான சிறப்பு மதிப்பளிப்பைப் பெற்றுக்கொண்டனர். 09:00 மணிக்குப் பொதுச்சுடரேற்றலோடு தொடங்கிய அகவை நிறைவு விழா 20:05 மணிக்குத் தமிழர் தாயகத்தின் விடியல் மீதான பற்றுறுதியை உறுதியுடன் அகமேந்தியவாறு சிறப்புடன் நிறைவுற்றது.





