பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் உயர் அதிகாரி சடலமாக மீட்பு!

அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணத்தில் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் முறைகேடு செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

நிதி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தில் பணியாற்றிய குறித்த அதிகாரி, குளியாப்பிட்டிய பகுதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர் தற்கொலை செய்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவுஸ்திரேலியக் கடன் வழங்குநர் ஒருவருக்குச் செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் டொலர் நிதி, சைபர் மோசடி மூலம் திசைதிருப்பப்பட்டமை தொடர்பாக ஒழுக்காற்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த மோசடி தொடர்பாக வெளிநாட்டு வளங்கள் திணைக்களம் மற்றும் பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தைச் சேர்ந்த நான்கு சிரேஷ்ட அதிகாரிகள் கடந்த ஏப்ரல் இறுதியில் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டனர்.

உயிரிழந்த அதிகாரியை வாக்குமூலம் அளிப்பதற்காகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் அங்கு முன்னிலையாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டவர்களில் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் மற்றும் உதவிப் பணிப்பாளர் ஆகியோரும், பொதுக் கடன் முகாமைத்துவ அலுவலகத்தின் பணிப்பாளர் மற்றும் மேலதிக பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

குளியாப்பிட்டிய பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.