பிஸ்கட் பக்கெட்டினுள் போதைப்பொருள் ஒழித்து கைதிக்கு வழங்க முயன்ற தாயும், மகளும் கைது

பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவருக்கு, பிஸ்கட்களுக்குள் மறைத்து வைத்து ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை வழங்க முயன்ற தாயும் மகளும் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பல்லேகலை, தும்பர போகாம்பறை சிறைச்சாலையில் நேற்று வியாழக்கிழமை (30) இடம்பெற்ற இந்தச் சம்பவம் இடம்பெற்றிருப்பதாக போகாம்பறை சிறைச்சாலை அத்தியட்சகர் சம்பத் வர்ணகுலசூரிய தெரிவித்தார்.

பல்லேகலை சிறைச்சாலையில், விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதியைப் பார்ப்பதற்காக வருகைத்தந்திருந்த இரு பெண்கள், கைதிக்கு வழங்குவதற்காக சாக்லேட் கிரீம் பிஸ்கட்களைக் கொண்டு வந்துள்ளனர்.

எனினும், சிறைச்சாலை அதிகாரிகள் குறித்த  பிஸ்கட்களைச் சோதனை செய்த போது , பிஸ்கட்களுக்கு இடையில்  போதைப்பொருட்கள் பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்தமை  கண்டறிந்துள்ளனர்.

இந்நிலையில்  சந்தேகநபர்களிடமிருந்து 680 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள், 3140 மில்லி கிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டுள்ளன. இதனையடுத்து, சிறைச்சாலையின் பார்வையாளர் அறையிலேயே வைத்து இவ்விரு சந்தேகநபர்களும் அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தலாத்துஓயா, உனுவின்ன பகுதியைச் சேர்ந்தவர்ந்த 38 வயதுடைய தாயும் 19 வயதுடைய மகளுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக  ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள் இருவரும்   பல்லேகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.