அரசாங்கத்தின் பாரிய ஊழல்களைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில், நிலக்கரி ஊழலை விடவும் இரண்டு மடங்கு பெரிய மற்றுமொரு ஊழலையும் எதிர்வரும் 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் அம்பலப்படுத்துவோம். ஊழலற்ற, தூய்மையான ஆட்சியை முன்னெடுக்க சஜித் பிரேமதாசவின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் மக்கள் இணைய வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் அழைப்பு விடுத்தார்.
சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த மே தினக் கூட்டம் வெள்ளிக்கிழமை கொழும்பு – மாளிகாவத்தை பீ.டி.சிறிசேன மைதானத்தில் இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மரிக்கார் இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,City & Local Guides
தேர்தலுக்கு முன்னதாக 18 மாதங்களுக்கு முன்பு மேடைகளில் ஏறி நின்று, மற்றவர்கள் அனைவரையும் திருடர்கள் என்று கூறி, தாங்களே சிறந்தவர்கள் மக்கள் முன்னிலையில் பெருமை பேசிக் கொண்டிருந்தனர். நாட்டை முன்னேற்றப் போவதாகக் கூறி பொய்யான வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றினர். கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசியத் தேவைகளுக்கான வரியைக் குறைப்பதாகவும், மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதாகவும் கூறி பெண்களின் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள், தற்போது எவ்விதச் சலுகைகளையும் வழங்கவில்லை.
தற்போதைய அரசாங்கத்திற்கு மக்கள் பலத்தைக் கொடுத்து, எதிர்க்கட்சியைப் பலவீனப்படுத்திய போதிலும், ஒரு மக்கள்வாத எதிர்க்கட்சியாகத் நாங்கள் பின்வாங்கவில்லை. அந்த வகையில் அரசாங்கம் பதவிக்கு வந்து மூன்று மாதங்கள் முடிவதற்குள் அவர்களின் முதல் பொய்யை அம்பலப்படுத்தி, சபாநாயகரை வீட்டிற்கு அனுப்பியது ஐக்கிய மக்கள் சக்தியே என்பதை இங்கு நினைவுபடுத்துகின்றேன்.
323 கொள்கலன் மோசடி மற்றும் நிலக்கரி இறக்குமதியில் நடைபெற்ற பாரிய ஊழல் போன்றவற்றை ஐக்கிய மக்கள் சக்தி வெளிப்படுத்தியது. குமார ஜயகொடிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டு வந்தபோது அது தோல்வியடையும் என்று பலர் கூறிய போதிலும், அரசாங்கம் தனது பலத்தைப் பயன்படுத்தி அதைத் தோற்கடித்த ஒரு வாரத்திற்குள்ளேயே அவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டமை ஒரு வரலாற்று வெற்றியாகும்.
அரசாங்கத்தின் அனைத்து ஊழல்களையும் நாங்கள் தொடர்ந்து வெளிப்படுத்துவோம். நிலக்கரி ஊழலை விட இரண்டு மடங்கு பெரிய மற்றொரு ஊழலை எதிர்வரும் 6ஆம் திகதி பாராளுமன்றத்தில் வெளிப்படுத்துவோம். கற்றவர்கள் மற்றும் புத்திசாலிகள் எனக் கூறிக்கொண்ட திருட்டுக் கும்பலிடம் ஏமாந்து மக்கள் வரிசைகளில் நின்று நெருக்கடிகளை எதிர்கொள்கின்றனர். இந்த நாட்டைப் பொருளாதார ரீதியாகக் கட்டியெழுப்ப ஊழலற்ற ஒரே மாற்று சக்தி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே. சஜித் பிரேமதாசவின் தலைமையில் ஒரு அரசாங்கத்தை உருவாக்க மக்கள் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கின்றோம் என்றார்.





