வவுனியாவில் தடைப்பட்ட 23 நீர் திட்டங்கள் விரைவில் ஆரம்பம்! – சுசில் ரணசிங்க உறுதி

வவுனியா மாவட்ட 73 சமுதாய நீர் வழங்கல் கருத்திட்டங்கள் அமுலில் உள்ளது. பல்வேறு காரணங்களால் 23 இடங்களில்  இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவில்லை.  வெகுவிரைவில் அப்பகுதியிலும் திட்டம் அமுல்படுத்தப்படும் என வீடமைப்பு, நிர்மாணிப்பு மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (07) நடைபெற்ற   அமர்வில்   வாய்மூல விடைக்கான  வினாக்கள்  வேளையில், இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கத்தினால் வவுனியா மாவட்ட சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர்  மேலும் உரையாற்றியதாவது,

வவுனியா மாவட்ட 73 சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டம் தற்போது  அமுல்படுத்தப்படுகின்றது. பிரதேச செயலக பிரிவுகளை அடிப்படையாகக் கொண்டு அவை முன்னெடுக்கப்படுகின்றன.

குறிப்பாக வவுனியா பிரதேச செயலக பிரிவில் 36 திட்டங்களும்,வெங்கலவெட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் 16 திட்டங்களும், வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவில் 11 திட்டங்களும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் 9 திட்டங்களும் செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவில் 11 திட்டங்களும் முன்னெடுக்கப்படுகின்றன. இதேவேளை இப்போது அமுல்படுத்தபடாமல் 23 திட்டங்கள் உள்ளன.

ஒருசில பகுதிகளில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாலும், சில இடங்களில் அதற்கான நிதி சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டத்திடம் இல்லாமை, நீர்நிலைகளில் நீர் மட்டம் குறைவடைந்தமை,  சில இடங்களில் அந்த நீர்த்திட்டங்களை மக்கள் பயன்படுத்தாமை ஆகிய காரணங்களால் அவை செயற்பாட்டில் இல்லாமல் இருக்கின்றன. எவ்வாறாயினும் அமுல்படுத்தப்படாமல் இருக்கும் திட்டங்களை செயற்பாட்டுக்கு கொண்டுவரத் தேவையான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றார்.