நீதித்துறை மீதான நம்பிக்கை இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டிரு்கிறது – சித்ரால் பெர்ணாந்து எம்பி

நீதிமன்ற தீர்ப்பு தொடர்பில் ஜனாதிபதியின் கூற்றால், எதிர்வரும் 25ஆம் திகதி வழக்கு தீர்ப்புகளை வழங்க இருக்கும் நீதிபதிகள் சங்கடமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நீதித்துறை தொடர்பில் மக்களுக்கு இருந்தவந்த நம்பிக்கையும் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டிரு்கிறது என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் சித்ரால் பெர்ணாந்து தெரிவித்தார்.

பராாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

மேதின கூட்டத்தின்போது ஜனாதிபதி வழக்கு தீர்ப்புகள் தொடர்பில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதியின் இந்த கூற்று சட்டத்துறை தொடர்பில் பாரிய சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. நாட்டின் நீதி கட்டமைப்பு தொடர்பில் மக்களுக்கு இருந்துவந்த நம்பிக்கை இல்லாமல் போகும் நிலை ஏற்பட்டிருக்கிறது. நீதிமன்ற சுயாதீனம் நாட்டின் அரசியலமமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் நீதிமன்ற சுயாதீனத்தில் தலையீடு மேற்கொண்டால் அதற்குரிய தண்டனை தொடர்பிலும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவ்வாறான நிலையில் ஜனாதிபதி எவ்வாறு எதிர்கால நீதிமன்ற வழக்கு தீர்ப்புகள் தொடர்பில் கதைக்க முடியும்?

அதேநேரம் எதிர்வரும்  25ஆம் திகதி நீதிமன்றங்களில் அதிகமான  வழக்கு தீர்ப்புகள் வழங்க இருக்கலாம். அவ்வாறு இருந்தால், ஜனாதிபதியின் இந்த கூற்றுக்கு பின்னா் 25ஆம் திகதி வழக்கு தீர்ப்பு வழங்க இருக்கும் நீதிபதிகளுக்கு எவ்வாறானதொரு மன நிலை ஏற்படும்? அவர்கள் சங்கடமான நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எமது நீதி்த்துறை தொடர்பில் எங்களுக்கு பூரண நம்பிக்கை இருக்கிறது. என்றாலும் நாட்டின் ஜனாதிபதி இவ்வாறு நீதிமன்ற சுயாதீன தன்மையில் கையடிப்பது பாரிய சிக்கலாகும்.

அதனால்  இதுதொடர்பில் பாராளுமன்ற விவாதம் ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி,சபாநாயகரிடம் கோரி இருக்கிறோம். என்றாலும் சபாநாயகர் அதற்கான அனுமதியை வழங்குவாரா என எங்களுக்கு தெரியாது. திறைசேரியின் 2,5  மில்லியன் டொலர் மோசடி தொடர்பாக பாராளுமன்ற விவாதம் ஒன்றை கோரியபோதும் சபாநாயகர் அதற்கு அனுமதி வழங்க மறுத்தார். என்றாலும் எதிர்க்கட்சிகள் ஒன்றாக செயற்பட்டு, பலவந்தமாக அந்த விவாதத்தை பெற்றுக்கொண்டோம். அதேபோன்று இது தொடர்பான விவாதத்தையும் நாங்கள் பலவந்தமாகவேனும் பெற்றுக்கொண்டு, மக்களுக்கு இதன் பாரதூரம் தொடர்பில் தெளிவுபடுத்த இருக்கிறோம்.

அதேநேரம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் ஜனாதிபதியின் இந்த கூற்றுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதனால் நீதிமன்ற சுயாதீனத்தை பாதுகாக்க ஐக்கிய மக்கள் சக்தி  முன்னின்று நடவடிக்கை எடுக்க எடுப்போம் என்றார்.