தித்வா சூறாவளியினால் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி, ஊவா பரணகம – மஸ்பன்ன நகருக்கு அருகில் மண்ணில் புதையுண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று 171 நாட்களுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மஸ்பன்ன நகரின் பஸ் நிறுத்தத்திற்கு அருகில் ஏற்பட்ட இந்த மண்சரிவினால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த பல பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கரவண்டிகள் மற்றும் சில கடைகளும் மண்ணுக்குள் புதையுண்டிருந்தன.
குறித்த பகுதியில் நிலவிய அபாய சூழ்நிலை காரணமாக, மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணிகள் மிகவும் மந்தகதியிலேயே முன்னெடுக்கப்பட்டு வந்தன. எனினும், தற்போது இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு மண் மற்றும் பாறைகளை அகற்றும் போதே முச்சக்கரவண்டி கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், இது வலப்பனை பணிமனையில் பணிபுரியும் நடத்துனர் ஒருவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளது.
அனர்த்தம் ஏற்பட்ட இரவு, அவர் தனது முச்சக்கரவண்டியை பஸ் நிறுத்தத்திற்கு அருகில் நிறுத்திவிட்டுச் சென்றிருந்த போதே மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.




