ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் பிரிவில், பருத்தியடைப்பு பிரதேசத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (25) டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
யாழ். மாவட்டச் செயலகத்தில் கடந்த 19 ஆம் திகதி இடம்பெற்ற மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைய யாழ்.அரச அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்க இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊர்காவற்றுறை பிரதேச செயலாளரின் ஒத்துழைப்புடன் ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி த.துசிதரன் தலைமையில் பருத்தியடைப்பில் உள்ள வீடுகளுக்கு களத்தரிசிப்பு இடம்பெற்றது.
இதன்போது நுளம்பு குடம்பிகள் அடையாளம் காணப்பட்ட சில வீடுகளுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கப்பட்டது. பல வீடுகளுக்கு அறிவுறுத்தலும் வழங்கப்பட்டது.
இதில் ஊர்காவற்றுறைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சுகாதார வைத்திய அதிகாரி ஜெ.சுகந்தராஜ், மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பி.சோழன், சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொலிஸார், கடற்படையினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாளைய தினம் ஊர்காவற்றுiயில் உள்ள நிறுவனங்களிலும் நாளை மறுதினம் பாடசாலைகளிலும் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.
டெங்கு நோய் காரணமாக இந்த வருடத்தில் (2026) நாடாளாவிய ரீதியில் இதுவரை 29 ஆயிரத்து 589 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன், இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இந்த வருடத்தில் இதுவரை 9 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.





