போதைப்பொருள் கடத்தல் ; தேரர்கள் உட்பட 25 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தாய்லாந்திலிருந்து பல கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்களை நாட்டுக்கு  கடத்தி வந்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 23 தேரர்கள் உட்பட 25 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூன் மாதம் 9ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு நீர்க்கொழும்பு  நீதிவான் நீதிமன்றம் இன்று (26) செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்ற மேலதிக நீதிவான் சுபானி அபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளளப்பட்டப் போதே அவர் இவ்வாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இதேவேளை இன்றையதினம்  நீதிமன்ற மண்டபத்தில் நிலவும் இடநெருக்கடியைக் கருத்திற்கொண்டு,  மெகசின் சிறைச்சாலையில் விளக்கமறியல்  வைக்கப்பட்டுள்ள  மேற்படி 24 சந்தேகநபர்களும் நிகழ்நிலை தொழில்நுட்பத்தின் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இருப்பினும், இந்தச் சம்பவத்தின் மூன்றாவது சந்தேகநபராக புதிதாகப் பெயர்குறிப்பிடப்பட்டுள்ள சந்திரகுமார தயாரத்ன என்பவர் மாத்திரம் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து தனிப்பட்ட முறையில் நீதிமன்றத்துக்கு  அழைத்து வரப்பட்டு  முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் அரச தரப்பு சார்பாக மன்றில்முன்னிலையான பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின்  உப பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ஷ , இந்த போதைப்பொருள் கடத்தல் மற்றும் வர்த்தகத்துடன் நேரடியாகத் தொடர்புடைய ‘ராஜா அன்வர்’ என்ற சந்தேகநபர் பற்றிய தகவல்கள் தற்பொழுது  விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவரைக் கைது செய்வதற்கான விரிவான  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும்  தப்பியோடியுள்ள மற்ருமொரு சந்தேகநபரான பௌத்த தேரருடன் இந்த ‘ராஜா அன்வர்’ நெருங்கிய தொடர்புகளைப் பேணியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்றார். இதற்கிடையில், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 22 வழக்குகளுக்கு அமைவாக மேலதிக விசாரணை அறிக்கைகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பெண் உப பொலிஸ் பரிசோதகர் லக்மாலி குறிப்பிடுகையில், இந்த போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் பிரதான  சூத்திரதாரி சிலர் தற்பொழுது அடையாளம் காணப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

அதற்கமைய, தனித்தனியாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள 22 வழக்குகளுக்காக மேலும் 8 சந்தேகநபர்களைப் புதிதாகப் பெயரிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மன்றில் சுட்டிக்காட்டினார். முன்வைக்கப்பட்ட விடயங்களை பரிசீலித்த நீதிவான், 25 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஜூன் 9ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். சந்தேகநபர்கள் சார்பில் சட்டத்தரணி சம்பத் கருணாரத்ன உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர்.