ஹட்டன் நகரில் உள்ள கோழிச் சந்தைகளில் வீசப்பட்ட கோழிக்கழிவுகளை ஒரு சிறிய லொறி ஒன்றில் ஏற்றிச் சென்று, மகாவலி ஆற்றில் கலக்கும் ஹட்டன் ஓயா ஆற்றில் கொட்டியதற்காக, ஹட்டன் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (29) சந்தேக நபர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அந்த இரு சந்தேக நபர்களும் கோழிக்கழிவுகளை லொறியில் ஏற்றிக்கொண்டு ஹட்டன் – கொழும்பு பழைய வீதி வழியாக இரு முக்கிய நீரோடைகளின் சங்கமமாகும் மகாவலி ஆற்றின் தொடக்கமாக அமைகிறது.
குறித்த நபர்கள் ஹட்டன் ஓயா ஆற்றில் கோழிக்கழிவுகளை கொட்டவிருந்தபோது, இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் அவர்களை பின்தொடர்ந்து சென்று சந்தேகத்தின் பேரில் அந்த இருவரையும் கைது செய்து, லொறியை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களும் லொறியுடன் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று ஹட்டன் பொலிஸ் சுற்றுச்சூழல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ச்சியாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஹட்டன் நகரில் கோழி இறைச்சி கழிவுகளை ஏற்றிக்கொண்டு சில லொறிகள் இவ்வாறு நீரோடைகளில் கொட்டுவதாகவும் இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
மேலும் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது என்று அப்பகுதி பொதுமக்கள் குறை கூறி வந்ததன் காரணமாக பொலிஸார் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




