போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பதவியிலிருந்து கபில பெரேரா உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தனது பதவியில் இருந்து விலகியுள்ளமை தொடர்பில் சர்ச்சைக்குரிய தகவல் வெளியாகியுள்ளது.
அதே அமைச்சில் பணியாற்றிய சிரேஷ்ட பொது நிர்வாக அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமைக்கு எதிராக கடந்த வாரம் உயர் நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பே இந்த உடனடி பதவி விலகலுக்கு நேரடிக் காரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தான் பதவியிலிருந்து விலகும் முடிவை கபில பெரேரா பொது நிர்வாக அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதுடன், இது குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் தகவல் அனுப்பியுள்ளார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நீண்டகாலம் பணியாற்றிய இவர், மீண்டும் கல்விச் சேவைக்குத் திரும்பவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் உண்மையான நிர்வாகப் பொறுப்பு தகுதிவாய்ந்த பொது நிர்வாக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்ற விதி இருந்தாலும், ஆட்சி மாற்றங்களின் போது தமக்கு இணக்கமானவர்களை நியமிக்கும் பாரம்பரிய அரசியல் முறை தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் போதும் தொடர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இவ்வாறிருக்கையில், நிர்வாக அதிகாரி அல்லாத சனத் நந்தன குமாரநாயக்க ஜனாதிபதியின் செயலாளராக நியமிக்கப்பட்டார். மேலும், துறைமுகங்களின் மேலாண் பணிப்பாளராக இருந்த பிரபாத் மாலவிகே மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த அரசியல் சூழலில், நிர்வாகச் சேவையைச் சேராத கபில பெரேரா அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டதால், அவருக்குக் கீழ் பணியாற்றிய 30 வருட முதிர்ந்த அனுபவம்கொண்ட விசேட தர நிர்வாக அதிகாரியான டபிள்யூ.எஸ். சத்யானந்தா தனது பதவியை இழக்கும் அநீதியை எதிர்கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பதவிக்காலத்தில் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்த சத்யானந்தா, ஆட்சி மாற்றத்தின் பின்னர் பொது நிர்வாக அமைச்சின் இருப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்தார்.
அதன்பிறகு, 2024 டிசம்பர் 10 அன்று, பொதுச் சேவை ஆணைக்குழுவின் தற்காலிக ஒப்புதலுக்கு உட்பட்டு, போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் மேலதிக செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
தான் டிசம்பர் 18 அன்று புதிய பதவியில் பொறுப்பேற்றதாக நீதிமன்றத்தில் தெரிவித்த சத்யானந்தா, இது குறித்து அமைச்சின் செயலாளர் கபில பெரேராவுக்கு வாட்ஸ்அப் (WhatsApp) மூலம் தெரிவித்து, சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்குமாறு கோரியதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
எவ்வாறாயினும், அன்று மதியம் சத்யானந்தாவின் உத்தியோகபூர்வ அறைக்கு சென்ற அமைச்சின் செயலாளர் கபில பெரேரா, கோபமாகவும் தன்னிச்சையாகவும் நடந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அச்சந்திப்பின் போது “இங்கு உங்களது சேவை தேவையில்லை” என்று கூறி, உடனடியாக அலுவலக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு சத்யானந்தாவுக்கு கபில பெரேரா உத்தரவிட்டதாகவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.
உயர் மட்ட அரச அதிகாரி ஒருவருக்கு முற்றிலும் பொருத்தமற்ற இந்த செயலால் தனக்கு அவமரியாதை ஏற்பட்டதாக கூறி சத்யானந்தா, அங்கிருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனது அடிப்படை மனித உரிமைகள் முற்றிலும் மீறப்பட்டுள்ளது என, இச்சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குள் சத்யானந்தா உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர் அர்ஜுன ஒபயசேகர, நீதியரசர்களான சோபித ராஜகருணா மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோரின் இணக்கத்துடன் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார்.
தீர்ப்பில், ஒரு மேலதிக செயலாளரை நியமிப்பதற்கான முழுமையான அதிகாரம் பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கு மட்டுமே உள்ளது என்றும், அந்த முடிவில் சட்டவிரோதமாக தலையிடுவது 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படக்கூடிய குற்றமாகும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமைச்சின் செயலாளர் கபில பெரேராவின் இந்த தன்னிச்சையான நடவடிக்கை நாட்டின் சட்டத்தின் ஆட்சியை கடுமையாக மீறுவதாகும் என்றும், அரசியலமைப்பின் 12(1) பிரிவின் மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட “சட்டத்தின் முன் சமத்துவம்” என்ற அடிப்படை மனித உரிமையை அவர் நேரடியாக மீறியுள்ளார் என்றும் உயர் நீதிமன்றம் ஒருமனதாகத் தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பு வரும்போது சத்யானந்தா ஓய்வு பெற்றிருந்ததாலும், தான் இழந்த தொழில்முறை மரியாதையை பணத்தால் மதிப்பிட முடியாது என்று அவர் கூறியதாலும் நீதிமன்றம் இழப்பீடு எதுவும் வழங்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்தே கபில பெரேரா தனது பதவியை தற்போது பதவி விலகல் செய்துள்ளதாக குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





