முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் சர்ச்சைக்குரிய குரல் பதிவு ஊடகங்களில் வெளியானமை தொடர்பில், ஊடகவியலாளர் ஒருவரை முல்லைத்தீவு பொலிஸார் மீண்டும் ஒரு மணிநேர விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று(29.05.2026) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரின் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவை ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறி, முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் மீது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதனடிப்படையில், கடந்த 27 ஆம் திகதி அவர் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
எனினும், அன்றையதினம் முறைப்பாட்டாளரான தவிசாளர் பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிக்காத காரணத்தினால், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக மீண்டும் நேற்றையதினம்(29) பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார்.
குறித்த விசாரணைகள் முல்லைத்தீவு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இடம்பெற்றதுடன், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளரும் அதில் பிரசன்னமாகியிருந்தார்.
இதன்போது, “குறித்த குரல் பதிவு எவ்வாறு உங்களுக்குக் கிடைத்தது?” , செய்தியால் மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும், இனிமேல் இவ்வாறான செய்திகளை போட வேண்டாம் என்றும் , போடப்பட்ட செய்தியை இல்லாது செய்யுமாறும் பொலிஸாரிடம் தவிசாளர் கூறியிருந்தார். இவ்வாறு செய்திகள் இனி வெளிவருமாக இருந்தால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என பொலிஸார் இதன்போது தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த ஊடகவியலாளர், “இது தனிநபர்கள் சார்ந்த உரையாடல் அல்ல. பிரதேச சபையின் முன்னாள் செயலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் அரசியல் பழிவாங்கல் தொடர்பான உரையாடல். மேலும் குறித்த தவிசாளரே இந்த உரையாடலை வாட்ஸ்சப் குழுவொன்றிலும் பகிர்ந்திருந்தார்” என்றார்.
இவ்வாறான விவகாரங்களை பொலிஸார் நேரடியாக நீதிமன்றில் முற்படுத்த முடியாது. எனவே, தேவையெனில் சிவில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்யுமாறு தவிசாளருக்கு அறிவுறுத்தியதையடுத்து விசாரணைகள் நிறைவுக்கு வந்தன.
கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் செயலாளரின் இடமாற்றம் அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்த நிலையில், அதனை உறுதிப்படுத்தும் வகையில் தவிசாளரும், சபை உறுப்பினர் ஒருவரும் இடையே இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
பொதுமக்களுக்கு உண்மைத்தன்மைகளை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மீது இவ்வாறான விசாரணைகள் மற்றும் அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவது, ஊடக சுதந்திரத்திற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என ஊடக வட்டாரங்கள் கவலை வெளியிட்டுள்ளன.





