ஹோர்முஸ் நீரிணை அருகே அமெரிக்க இராணுவத்திற்குச் சொந்தமான ‘அப்பாச்சி’ ரக தாக்குதல் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும், அதில் பயணித்த இரண்டு விமானிகளும் எவ்வித காயங்களுமின்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் உள்ள ஜோன் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தில் வைத்து, வொஷிங்டன் திரும்புவதற்கு முன்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்டபோதே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
“விமானிகள் நலமாக இருக்கிறார்கள். ஆம், யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது தொடர்பான விரிவான அறிக்கை ஒன்றை எமது நிர்வாகம் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகுதியில் வெளியிடும். என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் ‘AH-64 அப்பாச்சி’ ரக ஹெலிகொப்டர் ஒன்று திங்கட்கிழமை விபத்துக்குள்ளானதாகவும், அதன் பணியாளர்கள் இருவர் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை முதலில் செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன:
இது ஈரானிய படைகளின் தாக்குதலால் சுட்டு வீழ்த்தப்பட்டதா?, ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமா? அல்லது கடுமையான செயல்பாட்டு சிக்கல்கள் ஏதேனும் ஏற்பட்டதா? என்பது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இது குறித்து கருத்து அறிய ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களமோ, அமெரிக்க மத்திய கட்டளையகமோ உடனடியாகப் பதிலளிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானுடனான பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஈரானிய ஆளில்லா விமானங்களை கண்காணிக்கவும் அமெரிக்கா இந்த அப்பாச்சி ஹெலிகொப்டர்களை அண்மைக்காலமாகப் பயன்படுத்தி வருகிறது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே அண்மையில் ஏற்பட்ட மோதல்களைத் தொடர்ந்து, அமெரிக்கா தூதரக ரீதியாக ஒரு தற்காலிக போர்நிறுத்தத்தை ஏற்படுத்த முயன்று வரும் நிலையில், இந்த ஹெலிகாப்டர் விபத்து பிராந்தியத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





