மாகாணசபைத் தேர்தலின் சட்ட ,தொழில்நுட்ப சிக்கல்கள்!

பழைய தேர்தல் முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாயின் பெண் பிரதிநிதித்துவம் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தின் போது வேட்புமனுக்களுக்கான ஒதுக்கீடு மட்டும் மற்றும் – கட்டாய ஆசன ஒதுக்கீடு என்ற அடிப்படையில் பல யோசனைகளை தேர்தல்கள் ஆணைக்குழு பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு முன்வைத்துள்ளது.

மாகாணசபைத் தேர்தலுக்கான சட்டக் கட்டமைப்பு மற்றும் செயற்பாட்டு தயார்நிலை குறித்த தொழில்நுட்ப விடயங்கள் தொடர்பில் மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற விசேட செயற்குழு கடந்த மாதம் 29 ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அறிக்கை கோரியிருந்தது.

பெண் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கான 25 சதவீத கட்டாய ஒதுக்கீட்டு முறைமை,தேவையான சட்டரீதியான திருத்த நடவடிக்கைகள் மற்றும் தற்போதைய நிர்வாகத் தயார்படுத்தல்களின் நிலைமை உள்ளிட்ட விடயங்களை உள்ளடக்கி தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த புதன்கிழமை பாராளுமன்ற விசேட செயற்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

மாகாணசபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கான விசேட செயற்குழு அதன்தலைவர் வெளிவிவகாரத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையில் கடந்தவாரம் பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் கூடியது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் குழுவில் முன்னிலையாகியிருந்தனர்.

மாகாணசபை தேர்தல்கள் தொடர்பான முக்கிய நிர்வாக சட்ட மற்றும் கட்டமைப்புசார்ந்த விடயங்களை ஆணைக்குழு முன்வைத்துள்ளது.இதற்கமைய முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை பரிசீலனை செய்து, இரு வேறுப்பட்ட கொள்கை தெரிவுகளை தேர்தல்கள் ஆணைக்குழு தனது அறிக்கை ஊடாக முன்வைத்துள்ளது.

முன்மொழிவு 01- வேட்புமனுக்களுக்கான ஒதுக்கீடு மட்டும்

வேட்புமனுக்களுக்கான ஒதுக்கீடு மட்டும் என்ற முன்மொழிவின் கீழ் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் தங்களின் வேட்புமனுக்களைச் சமர்ப்பிக்கும்போது, ஆரம்ப வேட்பாளர் பட்டியலின் போது மாத்திரம் 25 சதவீத பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநித்துவத்துக்கான ஒதுக்கீடு என்ற ஏற்பாடு பொருத்தமானதாக இருக்கும்.இந்தத் தெரிவானது  வாக்குப்பதிவு முடிந்த பிறகு யாருக்கு எந்த தொகுதிகள் கிடைக்கும் என்பதை மாற்றாது.இது விண்ணப்பக்கட்டத்துக்கு மாத்திரம் பொருத்தமானதாக இருக்கும். சபையின் இறுதி  ஆசனங்களில் 25 சதவீதம் பெண்கள் அல்லது இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கு கிடைக்கும் என்பதை இது உத்தரவாதமளிக்காது.

முன்மொழிவு 02- கட்டாய ஆசன ஒதுக்கீடு

கட்டாய ஆசன ஒதுக்கீட்டின் கீழ் சபையின் இறுதி அமைப்பில் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்துக்கு 25 சதவீத  ஆசன ஒதுக்கீடு கட்டாயமாக்கப்படும். தேர்தலுக்குப் பின்னர் ஒரு சிறப்பு ஆசன ஒதுக்கீடு மற்றும் மாற்றீடு செய்யும் முறைமையை பயன்படுத்தும் வகையில் இதனை அடையாளப்படுத்த முடியும்.இந்த முறைமையின் கீழ் சபைகள்  தேர்ந்தெடுக்கப்பட்டால் அதனை நடைமுறைப்படுத்தும் போது நடைமுறை எண்ணிக்கை மற்றும் சட்ட ரீதியிலான  சிக்கல்கள் எழும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவத்துவ முறைமையின் கீழ் பெண்கள் மற்றும் இளைஞர் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதற்கான முறைமை வேட்புமனுக்கள் (இரு விருப்பங்களும் பொதுவானது)

இந்த முறைமையானது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேர்தல் செயன்முறை ஆரம்பத்தில் மூன்று தனித்தனி வேட்பாளர் பட்டியல்களை உள்ளடக்கிய ஒற்றை வேட்புமனுப் பத்திரத்தை சமர்ப்ப்பித்தைக் கட்டாயமாக்குகிறது.

வேட்புமனு முறைமையின் செயற்பாட்டு விதம்

வேட்புமனு முறைமையின் செயற்பாட்டு மாதிரியின் கீழ் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிர்வாக மாவட்டத்துக்கு வேட்புமனுக்களை சமர்ப்பிக்கும்போது ஒவ்வொரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியும் அல்லது சுயேச்சைக் குழுவும் மூன்று தனித்துவமான சான்றழிக்கப்பட்ட பிரிவுகளைக் கொண்ட ஒன்றை வேட்புமனுப் பத்திரத்தை தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

முன்னிலை வேட்புமனுப் பட்டியல்

பாலினம் அல்லது வயது பாரபட்சமின்றி எந்தவொரு வேட்பாளரையும் உள்ளடக்ககூடிய முதன்மைப் பட்டியல் இதுவாகும். இது அந்த மாவட்டத்துக்காகப் பரிந்துரைக்கப்பட வேண்டிய மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில்  50 சதவீதத்துக்கும் சமமானதாகும்.

பெண்களுக்கான பிரத்தியேக வேட்புமனுப் பட்டியல்

மாவட்டத்திற்குப் பொருந்தக்கூடிய 25 சதவீத   ஒதுக்கீட்டைப் பூர்த்தி செய்வதற்காகவே பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்டஇ பெண் வேட்பாளர்களின் பெயர்களை மாத்திரம் கொண்ட ஒரு அர்ப்பணிக்கப்பட்ட பட்டியலாகும்.

இளைஞர்களுக்கான பிரத்தியேக வேட்புமனுப் பட்டியல்

35 வயதிற்குட்பட்ட இளைஞர் வேட்பாளர்களின் பெயர்களை மாத்திரம் பிரத்தியேகமாகக் கொண்ட ஒரு அர்ப்பணிக்கப்பட்ட பட்டியலாகும்.

ஒன்றையொன்று மேவும் அடையாளங்களுக்கான கட்டாயப் பதிவு உத்தரவு ஒரு இளம் பெண் வேட்பாளர் (35 வயதிற்குட்பட்டவர்) பரிந்துரைக்கப்பட்டால், அவர் இந்த மூன்று பட்டியல்களில் எந்தப் பட்டியலுக்கு ஒதுக்கப்பட்டுள்ளார் என்பதை ஆரம்பத்திலேயே கட்சி தெளிவாக அறிவிக்க வேண்டும். அதன் பின்னர் வகைகளுக்கு இடையே மாற்றங்களைச் செய்வதோ அல்லது இடமாற்றம் செய்வதோ முற்றாகத் தடைசெய்யப்படும்.

சதவீதங்களின் விவரக்குறிப்பு: தேர்தலில் போட்டியிடும் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு அரசியல் கட்சியும் மற்றும் சுயேச்சைக் குழுவும் தங்களின் விரிவான வேட்புமனுப் பத்திரங்களுக்குள் குறைந்தபட்சம் 25சதவீத பெண் பிரதிநிதித்துவத்தையும் மற்றும் 25சதவீத இளைஞர் பிரதிநிதித்துவத்தையும் (35 வயதுக்குட்பட்ட வேட்பாளர்கள்) கண்டிப்பாகச் சேர்க்க வேண்டும்.

முழுமையான நிராகரிப்பு வரம்பு: வேட்புமனுப் பத்திரத்தில் அடங்கியுள்ள மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில்இ இந்த கட்டாய சதவீதங்களைச் துல்லியமாகப் பூர்த்தி செய்யத் தவறும் எந்தவொரு வேட்புமனுப் பத்திரத்தையும் முழுமையாக நிராகரிப்பதற்கான முழுமையான சட்டப்பூர்வ அதிகாரம் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிக்கு  வழங்கப்படும்