சமூக வலைதளங்களில் திமுகவினர் காரணமில்லாமல் மதிமுக மீது பழிதூற்றுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவின்படி விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையில் சீமை கருவேலை மரங்களை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இந்நிகழ்ச்சியை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமை வகித்து தொடங்கிவைத்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேகேதாட்டு அணை விவகாரத்தில் நமக்கு கேடு விளைவிப்பது கர்நாடக அரசு அல்ல, மத்திய அரசுதான். 2014-ம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்த அனைத்து கட்சிகளின் கூட்டம், அப்போதைய மத்திய அமைச்சர ஆனந்த குமார் வீட்டில் 2 நாட்கள் நடந்தது. அதில், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜவடேகரும் கலந்துகொண்டார்.
அப்போது, மேகேதாட்டு அணை கட்டினால் தஞ்சை மாவட்டத்தில் பஞ்சம் ஏற்படும் எனக் கூறி, அப்போதே நான் எதிர்த்தேன். ஒருமாத கால தவெக ஆட்சி அருமையாக உள்ளது.
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் காலம்காலமாக எல்லா ஆட்சிகளிலும் நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும்படியான சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
கூட்டணி குறித்து நாங்கள் இன்னும் யோசிக்கவே இல்லை. பொதுக்குழுவை கூட்ட வேண்டும். மிகவும் விசுவாசமாக இருந்து திமுகவினரை வெற்றி பெறச் செய்துள்ளோம். கூட்டணியில் உள்ள மற்றவர்கள் முடிவெடுத்து ஆளும் ஆட்சியில் சேர்ந்துள்ளார்கள். நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. சமூக வலைதளங்களில் திமுகவினர் எங்களை காரணமில்லாமல் பழி தூற்றும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். நாங்கள் அதைப் பற்றி கவலைப்படவில்லை. வரும் 27-ம் தேதி பொதுக்குழுவில் ஆலோசித்து எங்களது நிலைப்பாட்டை அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.





