அஹமதாபாத் – கொழும்பு இடையே நேரடி விமான சேவை இன்று முதல் ஆரம்பம்!

இந்தியாவின் அஹமதாபாத் நகருக்கும் கொழும்புக்கும் இடையிலான புதிய நேரடி விமான சேவை இன்று (19) வெள்ளிக்கிழமை  முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் மூலம் இரு நகரங்களுக்கும் இடையிலான பயண நேரம் சுமார் 08 மணித்தியாலங்களிலிருந்து 03 மணித்தியாலங்களாகக் கணிசமாகக் குறையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிட்ஸ்எயார் நிறுவனத்தினால் இயக்கப்படும் இந்த புதிய விமான சேவை, இந்திய குஜராத் மாநிலத்தின் அஹமதாபாத் நகரை கொழும்புடன் வாரத்திற்கு மூன்று நாட்கள் இணைக்கவுள்ளது.

கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பல தோல்வியுற்ற முயற்சிகளுக்குப் பிறகு, இவ்விரு நகரங்களுக்கும் இடையே நேரடி விமானத் தொடர்பொன்று ஏற்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

இந்தியா மற்றும் இலங்கை இடையிலான சுற்றுலா மற்றும் பயணத் தொடர்புகளை வலுப்படுத்துவதற்கான ஒரு முன்னோடி முயற்சியாக, சினமன் ஹோட்டல்ஸ் மற்றும் வொக்கர்ஸ் டூர்ஸ் ஆகியவற்றின் பங்களிப்புடன் இந்த திட்டம் சாத்தியமாக்கப்பட்டுள்ளதாக இத்துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் மிகப்பெரிய சுற்றுலாச் சந்தையாக இந்தியாவே விளங்குவதாக சுற்றுலாத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சினமன் ஹோட்டல்ஸ் அண்ட் ரிசோர்ட்ஸ் நிறுவனத்தின் கமல் முனசிங்க, கடந்த வருடம் இந்தியாவில் இருந்து சுமார் 500,000 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாகவும், இவ்வருடத்தில் அது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவின் பிற நகரங்களில் இருந்து நேரடித் தொடர்புகள் இருந்தபோதிலும், அஹமதாபாத் இதுவரை பயன்படுத்தப்படாத ஒரு சந்தையாகவே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலத்தின் வலுவான சுற்றுலா வர்த்தகக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச விடுமுறைப் பயணங்களுக்கான அதிகரித்து வரும் தேவை என்பன, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு முயற்சிகளில் அதற்கு முக்கிய இடத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான இந்தப் புதிய இணைப்பின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் வகையில், ஆரம்ப விழாவின் தொடக்கப் பயணத்தில் இலங்கை கிரிக்கெட் அணியின்; சனத் ஜயசூரிய உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.