மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இலுப்பைக் கடவை, படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடலுணவுகளைக் கொள்வனவு செய்யும் வாடிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு, குறித்த வாடிகளின் உரிமையாளர்களால் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
படகுத்துறைப் பகுதியில் கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கடலுணவுக் கொள்வனவு வாடிகளின் உரிமையாளர்களால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த பகுதிக்கு நேரில் சென்ற ரவிகரன், அங்கு கள நிலைமைகளைப் பார்வையிட்டார்.
அத்துடன், கடலுணவுக் கொள்வனவாளர்கள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். இதன்போதே கடலுணவுக் கொள்வனவாளர்களால் அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, படகுத்துறைப் பகுதியில் கடந்த 1970ஆம் ஆண்டு காலப்பகுதியில் கடலுணவுகளைக் கொள்வனவு செய்வதற்கென வாடிகள் அமைக்கப்பட்டு, கடலுணவுக் கொள்வனவுச் செயற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன.
இந்நிலையில் கடந்த யுத்த சூழல் காரணமாக அந்தப் பகுதிகளிலிருந்த மக்கள் இடப்பெயர்வைச் சந்திக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதி மீள்குடியேற்றம் செய்யப்பட்டபோது, அந்த இரு கடலுணவுக் கொள்வனவாளர்களுக்குரிய வாடி அமைந்திருந்த பகுதி கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்ததுடன், அந்த கடலுணவுக் கொள்வனவு வாடிகளையும் கடற்படையினர் பயன்படுத்தி வந்துள்ளனர்.
அந்த கடலுணவுக் கொள்வனவு வாடிகளை விடுவிக்குமாறு, அவ்வாடிகளின் உரிமையாளர்களால் தொடர்ச்சியாக உரிய தரப்பினரிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்தபோதும், அந்த வாடிகளை விடுவிப்பதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கள விஜயத்தின்போது தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை தற்போது படகுத்துறைப் பகுதியில் 150க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடற்றொழிலுக்குச் சென்றுவருவதாக கடலுணவு கொள்வனவாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.
கடற்படையினால் கடலுணவுக் கொள்வனவு வாடிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால் கடற்றொழிலாளர்களிடமிருந்து கடலுணவுகளைக் கொள்வனவு செய்வதில் தாம் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் கடலுணவுக் கொள்வனவாளர்கள் ரவிகரனிடம் முறையிட்டுள்ளனர்.
எனவே கடற்படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது கடலுணவுக் கொள்வனவு வாடிகளை உடனடியாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கடலுணவுக் கொள்வனவாளர்கள், ரவிகரனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் கடலுணவுக் கொள்வனவாளர்கள் மற்றும் மீனவர்களின் குறைபாடுகளைக் கேட்டறிந்துகொண்ட ரவிகரன், குறித்த கடலுணவுக் கொள்வனவு வாடிகளை விடுவிப்பது தொடர்பில் தான் கவனம் செலுத்துவதாக ரவிகரன் தெரிவித்தார்.
மேலும், இந்த கள விஜயத்தில் மன்னார் நகரசபை உறுப்பினர் சோமநாதன் பிரசாத் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.









