பொதுமன்னிப்பு வழங்கினால் உண்மைகளை கூறுவேன் என்கிறார் சோமரத்ன ராஜபக்ஷ!- நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவிப்பு

மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் நேரில் சென்று சந்தித்ததாகவும், அதன்போது தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினால் உண்மைகளை வெளிப்படுத்துவதாக சோமரத்ன ராஜபக்ஷ கூறியதாகவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார்.

பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி  படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார்.

அதனையடுத்து இதுபற்றிய மேலதிக விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள் மீண்டும் இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தனர்.

அச்சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான கடிதமொன்றை காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் கையளித்த சோமரத்ன ராஜபக்ஷ, செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் அதில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இவ்வாறானதொரு பின்னணியில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (19) செம்மணி மனிதப்புதைகுழியைப் பார்வையிட்டதன் பின்னர், அவரிடம் சோமரத்ன ராஜபக்ஷவின் அண்மைய வெளிப்படுத்தல்கள் தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, ‘நான் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலைக்குச் சென்று சந்திக்கவில்லை. இருப்பினும் காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர் அவரைச் சென்று சந்தித்தார். அதன்போது தனக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கினால் உண்மைகளை வெளிப்படுத்துவதாக சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருக்கிறார். உண்மையைக் கூறவேண்டும் என நினைப்பவர் இவ்வாறு செய்வாரா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.