தகுதியற்ற 58 பேர் சுகாதார தொண்டர்கள்!

தான் வெளிநாடு சென்றிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் அடிப்படைத் தகுதி இல்லாத 58 பேரை சுகாதாரத் தொண்டர்களாக நியமித்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் யாழ். போதனா வைத்தியசாலை சுகாதார தொண்டர்கள் தொடர்பாக கூட்டத்திற்கு தலைமை தாங்கிய கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை  தெரிவித்தார்.

சுகாதாரத்தொண்டர்கள் நியமனம் பற்றி அமைச்சர் சந்திரசேகர் கேட்ட போது 82 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு விட்டதாகவும், அடிப்படைத்தகுதி இல்லாத காரணத்தால் 58 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்க முடியவில்லையெனவும் வைத்தியர் சத்தியமூர்த்தி பதிலளித்தார்.

நீங்கள் ஆட்களை தெரிவு செய்த போது  அவர்களின் தகைமையை பரிசீலிக்கவில்லையா என்று அமைச்சர் கேட்டதற்கு தான் வெளிநாடு சென்றிருந்த காலத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் சி.ஜமுனானந்தாவே இவர்களை நியமித்ததாக வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்தார்.