அரசாங்கம் தற்போது பின்பற்றிச் செல்லும் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம், ரணில் விக்ரமசிங்க ஆரம்பித்தது அல்ல என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அவர் தற்போது ஆட்சியில் இருந்தால் இந்த வருடம் முடிவதற்குள் 10.5 பில்லியன் டொலர் இலக்கை நிறைவு செய்வார். அதற்கான வேலைத்திட்டம் அமைக்கப்பட்டிருந்தது என ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.
காலியில் இன்று (30) மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும்போது ஆரம்பித்த சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் அல்ல இன்று நடைமுறையில் இருப்பது. இதை முதலில் இலங்கை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். ரணில் விக்ரமசிங்க அமுல்படுத்திய வேலைத்திட்டத்தின்படி, 2025 டிசம்பர் 31 வரைக்கும் அவர் நாட்டை ஆட்சி செய்திருந்தால் 8.5 பில்லியன் டொலர் இலக்கை நிறைவு செய்திருப்பார்.
இந்த வருடம் முடிவதற்குள் அவர் 10.5 பில்லியன் டொலர் இலக்கை நிறைவு செய்வார். அதற்காக அவர் ‘பொருளாதார நிலைமாற்றுச் சட்டத்தை’ கொண்டு வந்தார். அந்தச் சட்டத்தில் சர்வதேச வர்த்தகம் எவ்வாறு நடைபெற வேண்டும், உள்நாட்டு வர்த்தகம் எவ்வாறு நடைபெற வேண்டும் என்பது தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இப்போது அவை அனைத்தும் சீர்குலைந்துள்ளன. இதற்கு சர்வதேச நாணய நிதியத்தைக் குறை சொல்லிப் பயனில்லை. பிரதான பிரச்சினை, இந்த விடயங்களைக் கையாளுவதில் உள்ள அறிவின்மைதான். அதற்கு ஆட்சியாளர்களைத் திட்டிப் பயனில்லை, வாக்காளர்களைத் திட்டிப் பயனில்லை. வாக்காளர்களுக்குப் பொய்களைக் கேட்பதற்குத்தான் மிகவும் பிடிக்கும். சொன்ன விடயங்கள் கிடைக்கவில்லை என்றாலும், காதுக்குக் கேட்க ஒரு தற்காலிக இனிமை கிடைத்ததே, அதுவே அவர்களின் மகிழ்ச்சியாக இருந்தது.
அனுபவம் இல்லாதபோது என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்க்க முடியாது. எனவே, அந்த இளைஞர்களுக்கு இந்த சிக்கல் புரிவதில்லை. அதுவே பொதுமக்கள் புரிந்துகொள்ளவேண்டிய பிரதான பிரச்சினையாகும்.
அதேவேளை தற்போது டெங்கு நோய் நாட்டில் தீவிரமடைந்துள்ளது. இந்த பிரச்சினை இப்போது கட்டுப்படுத்த முடியாத நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். டெங்குவைக் கட்டுப்படுத்த முறையான பொறிமுறை ஒன்று அவசியம். எங்களது அரசாங்கத்தின் போது இதற்காக பலவிதமான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
டெங்குவை முழுமையாக ஒழிக்க முடியாவிட்டாலும், அதைக் கட்டுப்படுத்துவது இந்த நேரத்தில் மிக அவசியமானது. ஆனால், தற்போதைய அரசாங்கத்திடம் அது குறித்த முறையான வேலைத்திட்டம் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.
அதனால்தான் ‘எல் போர்ட்’ நபர்களிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டாம் என அன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார். ஆனால், இப்போது என்ன செய்வது, மக்கள் அவர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டார்கள்.
இன்று ஒரு நுளம்பைக் கூட கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. டெங்கு நுளம்பு பெருகி வருகிறது. டெங்கு நுளம்பின் ஆயுட்காலம் சுமார் 12 நாட்கள் என்றே நினைக்கிறேன். அதனால், அந்த நாட்கள் தானாக கழியும்வரை எங்களுக்கு பார்த்துக்கொண்டுதான் இருக்கவேண்டிவரும் .
மேலும் உலக சந்தையில் எரிபொருள் விலை குறையும் போது, ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் அறிமுகப்படுத்திய விலை சூத்திரம் ஒன்று இருந்தது. உலக சந்தையில் விலை அதிகரிக்கும் போது இங்கும் அதிகரிக்கவும், குறையும் போது குறைக்கவும் அந்த சூத்திரம் வழிவகுத்தது.
அன்று இந்த சூத்திரம் குறித்த புரிதல், இந்த இளைஞர்களுக்கு இருக்கவில்லை. இப்போதாவது இதைப் புரிந்துகொண்டால் நன்றாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். எனவே, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை மக்களின் அறியாமையினால் அவர்களே உருவாக்கிக்கொண்ட பிரச்சினையாகும் என்றார்.





