2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் மற்றும் மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் என்பவற்றை பாராளுமன்றத்தின் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன சான்றுரைப்படுத்தினார்.
2002ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, சேர்பெறுமதி வரிச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலம் 2026 மே மாதம் 19ஆம் திகதி முதலாம் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டதுடன், 2026 ஜூன் மாதம் 23ஆம் திகதி திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின் மூலம் பாரம்பரிய நிதித் துறைகளையும் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தையும் இலக்காகக் கொண்டு தேசிய வரிக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. வதிவுள்ளவரல்லாத எண்ணிம சேவை வழங்குநர்களைப் பதிவு செய்தல், வரி விதிப்பிற்காக புதிய முறையியலொன்றை அறிமுகப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக விற்பனை முனைப் பொறிகளை பயன்படுத்துவதைக் கட்டாயமாக்குதல் ஆகியன இச்சட்டத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்படும் ஏற்பாடுகளுள் அடங்கும்.
மேலும், வரி ஏய்ப்புகள் மற்றும் மோசடியான முறையில் வரி நன்மைகளைப் பெறுவதற்கு எதிராகக் காணப்படும் தண்டனை ஏற்பாடுகளைக் கடுமையாக்குவதன் மூலம், வரி இணங்கியொழுகுகையையும் பொது நிதித் தொடர்ச்சியையும் மேம்படுத்துவதற்கும் இச்சட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளது.
அதேபோன்று, மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டமூலம் 2025 ஜூலை மாதம் 11ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரினால் முதலாம் மதிப்பீட்டுக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், 2026 ஜூன் மாதம் 11ஆம் திகதி திருத்தங்களின்றி பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது.
இச்சட்டத்தின் மூலம் குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகளை மத்தியஸ்தம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தலும், 2000ஆம் ஆண்டின் 44ஆம் இலக்க, இலங்கை வர்த்தக மத்தியஸ்த மத்திய நிலையச் சட்டத்தை நீக்குதலும், அவற்றோடு தொடர்புபட்ட அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்காக ஏற்பாடுகளைச் செய்தலும் நோக்கங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய, இவ்விரு சட்டமூலங்களும் முறையே 2026ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க, மத்தியஸ்தம் (குடியியல் மற்றும் வர்த்தகப் பிணக்குகள்) சட்டம் மற்றும் 2026ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க, சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டம் என நேற்று முதல் அமுலுக்கு வருகின்றன.





