தாதியர் பற்றாக்குறையால் தரமான சுகாதார சேவைக்கு அச்சுறுத்தல் – அரச தாதியர் சங்கம்

நாட்டில் நிலவும் கடுமையான தாதியர் பற்றாக்குறை மற்றும் தாதியர் கல்வித்துறையின் வீழ்ச்சி காரணமாக எதிர்காலத்தில் கல்வித் தரத்தில் குறைந்த தாதியர்களே உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று அரச தாதியர் சங்கம் எச்சரித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு எதிராக அரச ஆசிரியர் சங்கத்தினால் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்று (01) உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டமையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரச தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய கருத்து தெரிவிக்கையில்,

நாட்டில் தற்போது 65,000 தாதியர் சேவையில் இருக்கவேண்டிய இடத்தில் வெறும் 37,000 தாதியர் மட்டுமே பணிபுரிந்து வருகிறார்கள். அத்துடன் தாதியர் கல்லூரிகளில் நிலவும் சுமார் 150 விரிவுரையாளர்களுக்கான பற்றாக்குறையை நிவர்த்தி செய்யுமாறு சுகாதார அமைச்சிடம் பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும் அதற்குரிய தீர்வுகள் இதுவரை வழங்கப்படவில்லை. விரிவுரையாளர்களை நியமிப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு 3 வருடங்கள் கடந்துள்ள போதிலும், அதற்கான தேர்வுகள் இன்னும் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

முறையாக கல்வி மற்றும் தகுதியான விரிவுரையாளர்கள் இல்லாத சூழலில் கல்வித் தரத்தில் குறைந்த மற்றும் போதிய பயிற்சியற்ற தாதியர்களே உருவாக நேரிடும்.

இவ்வாறு பயிற்சியற்ற தாதியர்களை உருவாக்கி மக்களுக்கு முறையற்ற சுகாதார சேவையை வழங்கி பொதுமக்கள் மேலும் இக்கட்டான நிலைக்குள் தள்ளவே சுகாதார அதிகாரிகளும் அரசாங்கமும் முயற்சிக்கிறது.

மேலும், கடுமையான தாதியர் பற்றாக்குறை காரணமாக தற்போது சேவையில் உள்ள தாதியர் 6 மணித்தியாலங்கள் பணியாற்றவேண்டிய இடத்தில் 12 தொடக்கம் 18 மற்றும் 24 மணித்தியாலங்கள் வரை தொடர்ச்சியாக பணியாற்றவேண்டியுள்ளது. இதனால் அவர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இவ்வாறான பணிச்சுமை காரணமாகவே கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் கிண்ணியா வைத்தியசாலையில் தாதியர் ஒருவர் தவறான முடிவை எடுத்துக்கொண்டார்.

எனவே உடனடியாக தாதியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து விரிவுரையாளர்களை நியமிப்பதன் மூலம் தாதியர் கல்வித்துறையை சீரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும். குறித்த விடயத்தில் சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக உரிய தீர்மானம் கிடைக்கும் என நம்புகிறேன் என்றார்.