அமெரிக்காவின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (D.C. region) நிலவக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ள கடுமையான வெப்ப அலையின் காரணமாக, நாட்டின் புகழ்பெற்ற வருடாந்த சுதந்திர தின அணிவகுப்பு விழா முற்றாக இரத்து செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்க சுதந்திர தினமான ஜூலை 4ஆம் திகதி காலை 10:30 மணிக்கு இந்த அணிவகுப்பு நடத்தப்படவிருந்த நிலையிலேயே, இறுதி நேரத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் கொலம்பியா மாவட்டத்திற்கான தேசிய வானிலை சேவையகம் விடுத்துள்ள கடுமையான வெப்ப எச்சரிக்கையைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
அணிவகுப்பு ஆரம்பமாகவிருந்த காலை 10:30 மணி அளவில், அங்குள்ள வெப்பச் சுட்டெண் 110 முதல் 115 டிகிரி பாரன்ஹீட் வரை உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. இது மனித ஆரோக்கியத்திற்குப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய தீவிர வானிலை நிலையாகும்.
இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அணிவகுப்பு ஏற்பாட்டாளர்கள், நீண்ட ஆலோசனைகளுக்குப் பின்னரே இந்த ரத்துச் செய்யும் முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்நிகழ்வில் கலந்துகொள்ளும் கலைஞர்கள், அணிவகுப்பைப் பார்வையிட வரும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கே தாங்கள் முதலிடம் வழங்குவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் தலைநகரில் ஆண்டுதோறும் ஜூலை 4 கொண்டாட்டங்களின் மிக முக்கிய அங்கமாக இந்த பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. எனினும், நடப்பு ஆண்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மாற்றங்கள் இந்த பாரம்பரிய நிகழ்வுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துள்ளன.





