சீனாவில் காலணித் தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

தென்கிழக்கு சீனாவின் சின்ஜியாங் நகரில் உள்ள ஒரு காலணித் தொழிற்சாலையில் 9ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் குறைந்தது 28 பேர் உயிரிழந்ததாக சீன அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட காணொளிகளின்படி, எரிந்து கொண்டிருந்த கட்டிடத்திலிருந்து அடர்த்தியான கருப்புப் புகை வானத்தை நோக்கி எழுந்தது.

நூற்றுக்கணக்கான மீட்புப் பணியாளர்கள் விரைந்து வந்து, தொழிற்சாலைக்குள் இருந்த 200-க்கும் மேற்பட்டோரை பாதுகாப்பாக வெளியேற்றியதாக அரசு ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த துயரச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சீன அதிபர் ஷி ஜின்பிங், இந்த தீ விபத்து பெரும் உயிர் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார்.

விபத்துக்கான காரணத்தை உடனடியாக விசாரித்து, பொறுப்பானவர்கள் அல்லது அலட்சியமாக செயல்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட ஜின்ஜியாங் நகரம், சீனாவிலும் உலகிலும் ‘காலணித் தலைநகரம்’ என்று அழைக்கப்படுகிறது.

தரவு அறிக்கைகளின்படி, உலகின் மொத்த காலணி உற்பத்தியில் கிட்டத்தட்ட 20% இந்த நகரத்தால் வழங்கப்படுகிறது.

அங்கு அமைந்துள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் ஆண்டுதோறும் 120 கோடிக்கும் அதிகமான ஜோடி காலணிகளை உற்பத்தி செய்கின்றன.