முதல்வர் விஜய்யை விஜயகாந்துடன் ஒப்பிட வேண்டாம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் தெரிவித்தார்.
மதுரையில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: கரூர் சம்பவத்தில் காவல் துறையினர் மீது குற்றம் சுமத்தும் முதல்வர் விஜய், தற்போது அந்த துறையை அவர்தானே வைத்துள்ளார்.
அவர்கள் மீது ஆட்சிக்கு வந்து 60 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், இதுவரை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முதல்வர் பொதுவெளியில் பேசும்போது பொறுப்பை உணர்ந்து பேசாமல், இன்னும் நடிகராகவே இருக்கிறார் என்பது மட்டுமல்லாமல், தான் தினமும் படப்பிடிப்புக்கு செல்வதாகவே நினைக்கிறார்.
அமைச்சர் நிர்மல்குமாரும், விமர்சிக்கும் எதிர்க்கட்சிகளை பார்த்து உடனே அரசியலை விட்டு போங்கள் என்கிறார். அரசியலை விட்டு தமிழ்நாட்டு மக்கள் யாரை வெளியேற்ற வேண்டுமோ அவர்களை உறுதியாக வெளியேற்றுவர்.கரூர் மேடையில் முதல்வர், துக்கத்துக்கு வந்ததுபோல கருப்புச் சட்டை அணிந்து வந்தார்.
ஆனால், அவரது பேச்சிலோ, உடல் மொழியிலோ எந்த துக்கமும் வெளிப்படவில்லை. அவரின் பேச்சு தொனியில் அகம்பாவம், ஆணவம்தான் தெரிகிறது. அவரது சினிமா பிரபலத்தை வைத்து, 60 ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு ஒரு மாற்று வேண்டுமென்ற இடத்தில் மக்கள் அவருக்கு 108 தொகுதிகள்தான் கொடுத்திருக்கிறார்கள். பெரும்பான்மையை தரவில்லை.
எனவே, பெரும்பான்மைக்காக மற்ற கட்சியில் வெற்றி பெற்றவர்களை; கட்சிகளை சேர்த்திருக்கிறார். அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்த 6 எம்எல்ஏக்கள் அனைவரும் இரட்டை இலையில் நின்று வெற்றி பெற்றவர்கள்தான். அவர்களுக்கு ஏதோ தருகிறேன் என சொன்னதால்தான் அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
குறிப்பாக, அதிமுக-திமுக கூட்டுக் களவாணி என முதல்வர் பேசுவது கண்டிக்கத்தக்கது. ஏனென்றால், இவர்தான் அமமுக எம்எல்ஏ முதல் 6 அதிமுக எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைத்து களவாணித்தனம் செய்துள்ளார். எனவே, உண்மையான எம்எல்ஏக்கள் களவாணி முதல்வர்தான். விஜயகாந்த் சினிமாவில் மட்டும் நடித்தார். வெளியில் எங்கும் நடிக்க மாட்டார். எனவே, முதல்வர் விஜய்யை விஜயகாந்துடன் ஒப்பிட வேண்டாம்.





