நடப்பு ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான முதல் ஆறு மாத காலப்பகுதியில், நாட்டின் சுற்றுலாத்துறை மூலம் 1,511 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. எனினும், கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் கிடைத்த 1,713 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்துடன் ஒப்பிடுகையில், இது 11.8 சதவீத வீழ்ச்சியாகும் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் புத்திக ஹேவாவசம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த ஆண்டின் முதல் 6 மாத காலப்பகுதியில் 1,146,573 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததன் மூலமே குறிப்பிட்ட வருமானம் கிடைத்துள்ளது. இந்த வருகையானது கடந்த 2025ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் வருகை தந்த 1,168,044 சுற்றுலாப் பயணிகளுடன் ஒப்பிடும்போது 1.8 சதவீத வீழ்ச்சியைக் காட்டியுள்ளது.
இத்தரவுகளுக்கமைய, நடப்பு ஜூன் மாதத்தில் மட்டும் 124,551 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதுடன், அதன் மூலம் 151.1 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளது. ஆனால், கடந்த 2025ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் 138,241 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருந்ததுடன், அவர்கள் மூலம் கிடைத்த வருமானம் 169.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



