ஹோமாகம தீ விபத்தில் உயிரிழந்த தமிழ் யுவதி உட்பட ஐவர்..!

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த தொழிற்சாலையில் நேற்று முன்தினம் (21) காலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் ஐவர் உயிரிழந்த நிலையில், அவர்களின் உடலங்கள் மீதான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்துள்ளதால், அவை ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டு  மரபணு பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

ஹோமாகம தீ விபத்தில் உயிரிழந்த தமிழ் யுவதி உட்பட ஐவர்..! பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல் | Homagama Fire Accident Death Details

 

இந்த பரிசோதனை முடிவுகள் வெளியாவதற்கு ஐந்து நாட்கள் வரை செல்லலாம் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த, மரியோ எட்வர்ட் என்ற, சுமார் 15 வருடங்களாக குறித்த தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்த ஒருவரும் அடங்குவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த தெனியாயவைச் சேர்ந்த 19 வயதுடைய சஹன் உதார ஆறு மாதங்களுக்கு முன்பு அங்கு பணிக்கு சேர்ந்துள்ளதுடன், அவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த கமகே திலீப் மதுசங்க (வயது 19) என்பவர் 4 நாட்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களில் நால்வர் அங்கு, பணிக்கு சேர்ந்து சில மாதங்களே ஆகின்றன என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களின் விபரம்

 

இந்த சம்பவத்தில் ஹட்டன் – மஸ்கெலியாவைச் சேர்ந்த 26 வயதுடைய வரதராஜ் தமயந்தி என்ற யுவதியும்  உயிரிழந்துள்ளதுடன், இவர் குறித்த தொழிற்சாலையில், 6 மாதங்களுக்கு முன்பே பணியில் இணைந்து கொண்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த மற்றையவர் அட்டகலம்பன்ன பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய சச்சின் தில்ஷான் என்பவரென கண்டறியப்பட்டுள்ளது.

ஹோமாகம தீ விபத்தில் உயிரிழந்த தமிழ் யுவதி உட்பட ஐவர்..! பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல் | Homagama Fire Accident Death Details

இவர் ருமேனியா நாட்டுக்கு தொழிலுக்காக செல்வதற்கு விசா கிடைக்கும் வரை தற்காலிகமாக அங்கு பணிபுரிந்து வந்தவர் என தெரியவந்துள்ளது.

வேலைவாய்ப்பு பணியகத்தில் இரண்டு நாட்கள் பயிற்சியை நிறைவுசெய்துள்ள இவர், பணியில் இணைந்து இரண்டு வாரங்களேயாவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இந்த தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்கும் நடவடிக்கையின்போது, மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் அங்குள்ள பல குறைபாடுகளை சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக, தொழிற்சாலையில் முறையான தீயணைப்பு பாதுகாப்பு அமைப்பு இன்மையை பிரதானமாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அதிகாரிகள் வழங்கிய கால அவகாசம்

 

அத்துடன், 20 நாட்களுக்குள் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகள், கடந்த மாதம் 2 ஆம் திகதியன்று எழுத்துமூலம் குறித்த தொழிற்சாலையில் நிர்வாகத்துக்கு அறிவுறுத்தியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ஹோமாகம தீ விபத்தில் உயிரிழந்த தமிழ் யுவதி உட்பட ஐவர்..! பிரேத பரிசோதனை தொடர்பில் வெளியான தகவல் | Homagama Fire Accident Death Details

இந்த கால அவகாசம் முடிவடைவதற்கு ஒரு நாள் மாத்திரமே இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை,  மின்சாரக் கசிவு காரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

தொழிற்சாலைகளில் 80 முதல் 100-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்த போதிலும், தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான போதிய பாதுகாப்பு வழிமுறைகளும் அவசரகாலத் திட்டங்களும் அங்கு முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை என மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்