அட்டன் – டிக்கோயா நகரசபையின் உத்தியோகத்தர்கள் கடந்த 23ஆம் திகதி வியாழக்கிழமை பணிப் பகிஷ்கரிப்பு செய்தமைக்கான காரணங்கள் தமக்கு தெரியாது என்றும் அது குறித்து நகர மக்களுக்கும் விளக்கமளிக்க சபைத் தலைவருக்கு பொறுப்புள்ளது என அட்டன் – டிக்கோயா நகரசபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபைத் தலைவரிடம் கேள்விகளை எழுப்பினர்.
நகரச சபைத் தலைவர் அசோக்க கருணாரட்ன தலைமையில் வெள்ளிக்கிழமை (24) காலை நடைபெற்ற விசேட கூட்டத்தின்போது உரையாற்றிய உறுப்பினர் லோகேஸ்வரன்,
‘பணி பகிஷ்கரிப்பு எதற்கு இடம்பெற்றது என எமக்குத் தெரியாது. மேலும் தலைவரான நீங்கள் அன்றைய தினம் நிதிக்குழு கூட்டம் இருப்பதாக அறிவித்ததால் நாம் காலை 10 மணிக்கு நகரசபைக்கு வருகை தந்தோம். ஆனால் சபை காரியாலயம் பூட்டு போடப்பட்டிருந்தது. சபை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் சபை வளாகத்தில் குழுமி நின்றனர். இதற்கான காரணத்தை நீங்கள் கூறவேண்டும். சபையை பூட்டுவதற்கு யாருக்கு அதிகாரம் இருக்கின்றது? எனக் கேள்வி எழுப்பினார்.
உபதலைவர் சுரேன் உரையாற்றுகையில், பணிப் பகிஷ்கரிப்பு நடந்தமை எமக்குத் தெரியாது. நாம் நிதிக் கூட்டத்துக்கு வருகை தந்தபோது சபை செயலாளர் கூறிய கருத்துகள் கண்டிக்கத்தக்கன. இங்கு தலைவர் ஒருவரே இருக்கின்றார் என்றும், உபசெயலாளருக்கு எந்த அதிகாரங்களும் இல்லை என கூறினார்.
நகர சுத்திகரிப்பு தொழிலாளர்களை எமக்கு எதிராக தூண்டிவிட்டு சிலர் வேடிக்கை பார்த்தார்கள். நாம் அங்கிருந்து வெளியேறிய போது அவர்கள் கூக்குரலிட்டு சத்தமிட்டனர். அதை நகரசபை உத்தியோகத்தர்கள் கை கொட்டி இரசித்தனர். நாம் மக்கள் பிரதிநிதிகள். எமது கெளரவத்தை பாதுகாக்கும் கடப்பாடு தலைவரான உங்களுக்கும் உள்ளது என்றார்.
உறுப்பினர் டாக்டர் நந்தகுமார் உரையாற்றும் போது, தலைவர் அவர்களே நீங்கள் அமர்ந்திருக்கும் ஆசனத்தில் நான் எட்டு வருடங்கள் அமர்ந்திருந்தேன். இன்று உறுப்பினராக இங்கிருக்கின்றேன். நாளை உங்களுக்கும் அந்த நிலைமை வரலாம். இங்குள்ள அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் எமக்கு உரிய கெளரவத்தை தருவதில்லை. நாளை உங்களுக்கும் அதே நிலைமை தான் என்பதை தெரிந்துகொள்ளுங்கள் என்றார்.
உறுப்பினர் கேசவமூர்த்தி உரையாற்றுகையில், இன்று வீதியில் சுற்றித்திரிவோர் சமூக ஊடகங்களில் நகர சபையையும் எங்களையும் விமர்சிக்கின்றனர். அதற்கு நாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் இங்கே சபையிலிருக்கும் சில அதிகாரிகளும் உத்தியோகத்தர்களும் அவ்வாறு நடந்துகொள்வது சரியல்ல. தாம் பணி புரியும் ஸ்தாபனத்தைப் பற்றியும் முன்னாள் தலைவர்களைப் பற்றியும் அவதூறு பேசுகின்றனர். கழிவு கொட்டும் இடங்களை விற்றுவிட்டதாகக் கூறுகின்றனர். எனவே தலைவராகிய நீங்கள் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றீர்கள் எனக் கேள்வியெழுப்பினார்.
இவற்றுக்கு பதில் வழங்கிய சபைத் தலைவர், “எமது அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் தம்முடைய கடமையை செய்ய கடை வீதிகளுக்குச் சென்றபோது அங்கு அவர்களுக்கு இடையூறுகள் விளைவிக்கப்பட்டன. எனவே அவர்கள் தமது தொழில் பாதுகாப்புக்காக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்தனர்.
மேலும் தமக்கு நடந்த அநீதிக்கு எதிராக சில மணிநேரங்கள் பணி பகிஷ்கரிப்பு செய்தனர். நான் அச்சந்தர்ப்பத்தில் நுவரெலியாவில் கூட்டம் ஒன்றுக்கு கலந்துகொள்ளச் சென்றிருந்தேன். பின்பு சம்பவம் அறிந்து நேரடியாக பொலிஸ் நிலையத்துக்கே சென்று நிலைமைகளை சுமூகமாக்கினேன். பகிஷ்கரிப்பும் கைவிடப்பட்டது. ஆனால் நீங்கள் கூறியது போன்று அலுவலகம் மற்றும் வாசிகசாலையை பூட்டியமை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுக்க தயார்” என்றார்.





