தொழிலாளர் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் தரவு அமைப்பை ஒருங்கிணைத்து புதிய தரவு அமைப்பின் கீழ் செயற்பட புதிய மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகள் மற்றும் ஊழியர் பதிவுகளை இணையவழியில் மேற்கொள்வதற்காக டிஜிட்டல் வசதிகளை ஏற்கனவே வழங்கியுள்ளோம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (24) நடைபெற்ற அமர்வில் நிலையியற் கட்டளை இருபத்தேழு இரண்டின் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றின் வினைத்திறன் மற்றும் உறுப்பினர்களின் நன்மைகளை அதிகரிப்பதற்காக தொழிலாளர் திணைக்களம் ஊடாக பல புதிய நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய தரவு அறிக்கைகளின்படி, ஊழியர் சேமலாப நிதியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள மற்றும் நன்மையடையும் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 22.9 மில்லியனாகும். அவர்களுள்3.1 மில்லியன் கணக்கானோர் மாதாந்தம் நிலையான வைப்பாளர்களாக உள்ளனர். அத்துடன், ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தில் பதிவுசெய்துள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை சுமார் மூன்று மில்லியனாகும்.
2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஊழியர் சேமலாப நிதியத்தின் சொத்து மதிப்பு 4.9 டிரில்லியன் ரூபாவாகவும், ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதியத்தின் சொத்து அளவு 637.5 பில்லியன் ரூபாவாகவும் காணப்படுகின்றன. மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான சேவை வழங்குநர்கள் எண்ணிக்கை 101,000 ஆகவும், அதில் பகுதி அளவிலான அரச துறையைச் சேர்ந்த முதலாளிமார்களின் எண்ணிக்கை 376 ஆகும்.
பணம் செலுத்தத் தவறிய தனியார் மற்றும் அரை-அரசு துறை (பங்காளித்துவம்) நிறுவனங்களிடமிருந்து நிலுவைத் தொகையை அறவிட்டுக்கொள்ளும் நடைமுறையை தொழிலாளர் திணைக்களம் தற்போது விரைவுபடுத்தியுள்ளது.தொழிலாளர் திணைக்களம் மற்றும் மத்திய வங்கியின் தரவு அமைப்புகளை ஒருங்கிணைத்து, புதிய தரவு அமைப்பின்கீழ் செயற்படுவதற்கு புதிய மென்பொருள் ஒன்று தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.
அத்துடன், ஊழியர்கள் பதிவு உட்பட பல ஊழியர் சேமலாப நிதியத்தின் சேவைகளை இணையவழியில் மேற்கொள்வதற்கான ‘டிஜிட்டல் ஊழியர் சேமலாப நிதிய’ வசதி கடந்த டிசம்பர் மாதம் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.





