சாய்ந்தமருது வைத்தியசாலையின் புதிய அபிவிருத்திக்குழு நியமனத்தில் முறைகேடு

சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு நியமனத்தில் இடம்பெற்றுள்ள முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு திகாமடுல்ல மாவட்ட ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் உதுமா லெப்பை சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் பாராளுமன்ற ஆலோசனை கூட்டம் அமைச்சர் டொக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் கடந்த வௌ்ளிக்கிழமை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுளளார்.

ஆளும்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குபற்றிய இக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய உதுமாலெப்பை எம்.பி மேலும் குறிப்பிடுகையில், சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி குழு வைத்தியசாலை நிர்வாக கையேட்டின் விதி படியும் மாகாண சுகாதார அமைச்சின் சுகாதார சேவை ஒழுங்கு விதிகளுக்கு அமையவும் கிழக்கு மாகாண ஆளுநரினால் 2025 மார்ச் 24 இல் நியமிக்கப்பட்டதோடு வைத்தியசாலையின் முன்னேற்றத்திற்கும் மேம்பாட்டிற்கும் பங்களிப்பு வழங்கி வந்தன. இக்குழு பிரதேச வைத்தியசாலை நிர்வாக கையேட்டின் விதி முறைகளின் படியும் மாகாண சுகாதார அமைச்சின் சுகாதாரசேவை விதிகளுக்கு அமைவாகவும் சிறப்பாக இயங்கி வந்தது. வைத்தியசாலை பொறுப்பதிகாரியும், அங்கு கடமையாற்றும் பணியாளர்களும் பிரதேச மக்களும் வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் செயல்பாடுகளில் திருப்தியடைந்தனர்.

இக்குழு அமைக்கப்பட்டு இன்னும் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகாத நிலையில் தற்போது புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அக்குழுவில் ஆளும் கட்சியின் பிரதேச பாராளுமன்ற உறுப்பினரொருவரின் ஆதரவாளர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளனர். இந்நியமனம் பிரதேச மக்கள் மத்தியில் அதிருப்தியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

வைத்தியசாலை, பாடசாலை போன்ற பொது நிறுவனங்களுக்கு அபிவிருத்தி குழு உறுப்பினர்களாக பிரதேசத்தின் துறை சார்ந்த முக்கியஸ்தர்களும் பொதுவான செயற்பாட்டாளர்களும் அப்பகுதியின் அரசியல் கட்சிகளது பிரதிநிதிகளும் உள்வாங்கப்படும் சம்பிரதாயம் இங்கு மீறப்பட்டுள்ளது. இது தொடர்பில் நானும் எமது கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமும் இணைந்து உங்களை நேரில் சந்தித்து ஏற்கனவே முறையிட்டுள்ளோம்.

மேலும் ஒரு வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு தலைவராக அந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் பொறுப்பதிகாரியே செயற்படுவது வழமை. அந்த வழமைக்கு மாற்றமாக சாய்ந்தமருது வைத்தியசாலையில் மருத்துவ பொறுப்பதிகாரி கடமையில் இருக்கின்ற நிலையில் வேறொரு வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியர் ஒருவர் சாய்ந்தமருது வைத்தியசாலை அபிவிருத்தி குழு தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதுவும் சுகாதார அமைச்சின் சுற்றறிக்கைக்கு முரணான விடயமாகும்.

இவ்விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி சாய்ந்தமருது வைத்தியசாலையின் புதிய அபிவிருத்தி குழு நியமனம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறும் அபிவிருத்தி குழு நியமனம் சுகாதார சேவைகள் ஒழுங்கு விதிகளுக்கு அமைய இடம்பெற ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக் கொள்கிறேன் என்றார்.