ஜனநாயகத்தையும் விவசாயிகளின் உரிமைகளையும் பாதுகாக்க போராட வேண்டிய காலம் வந்துவிட்டது!

மக்களின் ஜனநாயகத்துக்கு பாதகத்தை ஏற்படுத்தி, விவசாயிகளின் உரிமைகளைப் பறிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய காலம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

திஸ்ஸமஹாராமையில் நடைபெற்ற விவசாயிகள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்கள் கோராத நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் திட்டத்தின் மூலம் அரசாங்கம் நாட்டில் சர்வாதிகாரத்தையும் தனி நபர் ஆட்சியையும் ஏற்படுத்த முயற்சிக்கிறது. நீதித்துறை மற்றும் சட்டத்தின் ஆட்சி குறித்து 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட 506 பக்கங்கள் கொண்ட அறிக்கையில் கூட நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்துவது குறித்துக் குறிப்பிடப்படவில்லை. அந்த அறிக்கையை அரசாங்கம் உடனடியாக மக்களுக்குப் பகிரங்கப்படுத்த வேண்டும்.

தேர்தல் காலத்தில் நெல் கிலோவுக்கு 150 ரூபா தருவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், இன்று ஒரு கிலோ நெல்லுக்கு 120 ரூபாவை மட்டுமே வழங்கி விவசாயிகளுக்குக் கடுமையான நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. விவசாய உபகரணங்கள் மீது வட் வரியைச் சுமத்தியுள்ளதால் உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளது.  அரசு நிதியியல் அறிக்கையின்படி அரசாங்கத்தின் வருமானம் 27 சதவீதம் அதிகரித்திருந்தும் அதன் பயன் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை.

மின்சாரக் கட்டணக் குறைப்பு, மலிவு விலையில் எரிபொருள் மற்றும் வாகனக் கனவுகள் என அனைத்து வாக்குறுதிகளையும் அரசாங்கம் பொய்ப்பிக்க செய்ய வைத்துள்ளது. எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் விவசாயிகளுக்கான உரிமைகளைச் சட்டப்பூர்வமாக உறுதி செய்யும் தனித்துவமான சமூக ஒப்பந்தம் உருவாக்கப்படும் என்றார்.