இந்திய மீனவர்களின் அத்துமீறல்: விஜய் ஆராய்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் !

இந்தியாவின் தமிழகத்திலிருந்து வரும் கடற்கொள்ளையர்களிடமிருந்து கடலையும், தங்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாப்பதற்காக எங்கள் மக்கள் தொடர்ந்தும் போராடுகின்றார்கள். எனவே, இதுதொடர்பாகத் தற்போதைய தமிழ்நாட்டு முதலமைச்சர் விஜய் ஆராய்ந்து உறுதியான நடவடிக்கைகளை எடுக்க
வேண்டுமென நாங்கள் எதிர்பார்க்கின்றோம் எனக் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,                      
பல ஆண்டுகளாக எங்கள் கடற்பரப்பைக் கொள்ளையடிக்கின்ற, சூறையாடுகின்ற இந்திய இழுவைமடிப் படகுகளின் செயற்பாடுகள் தொடர்ந்த வண்ணமிருக்கின்றன. இலங்கைக் கடற்பரப்பு எல்லையை மீறி வடக்குக் கடற்பரப்பை ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளை, கடல் வளங்களை அழிக்கும் செயற்பாடுகளை இந்தியாவின் தமிழகத்திலுள்ள ஒரு சில மீனவர்கள் தொடர்ந்தும் ஈடுபட்டு வருவது கண்டனத்துக்குரியது. இவற்றைத் தடுத்து நிறுத்துவதற்கு ஏதுவான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டிருக்கின்றன. இதன் காரணமாக முன்னரை விடத் தற்போது இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைந்திருக்கின்றன. மேலும் குறைப்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.