பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் சீனா எல்லைப் பகுதியில் உள்ள காரகோரம் மலைத்தொடரில், உலகின் 12-வது மிக உயர்ந்த சிகரமான ‘பிராட் பீக்’ அமைந்துள்ளது.
புகழ்பெற்ற நேபாள வம்சாவளி மலையேற்ற வீரரான நிர்மல் ‘நிம்ஸ்’ புர்ஜா உள்ளிட்ட 6 பேர் அடங்கிய குழுவினர் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், அவர்கள் சென்று கொண்டிருந்த மேற்குப் பகுதி பாதையில், சுமார் 21,600 முதல் 21,850 அடி உயரத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று திடீரென பனிச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கிய 6 பேரும் உயிரிழந்துவிட்டனர். இதை அவரது ‘எலைட் எக்ஸ்பெட்’ நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.
பிரிட்டனின் ‘குர்க்கா’ மற்றும் ‘ஸ்பெஷல் போட் சர்வீஸ்’ (எஸ்பிஎஸ்) படைகளில் பணியாற்றிய முன்னாள் வீரரான நிர்மல் புர்ஜா, முழுநேர மலையேற்ற வீரரான பிறகு பல உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.





