திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியின் வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை சரிபார்க்கும் பணி நிறைவு பெற்றது. அதில் வாக்குப்பதிவில் எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்நிலையில் கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்கு இயந்திரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் மு.க.ஸ்டாலின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கொளத்தூர் தொகுதியின் 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் செலுத்திய வாக்கை சரிபார்க்கும் இயந்திரங்களின் செயல்பாட்டை சரிபார்த்தல் பணி கடந்த ஜூலை 29-ம் தேதி தொடங்கியது.
இந்த பணிகள் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு கிடங்கு அறையில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜி.எஸ்.சமீரன், வேட்பாளரின் முகவர்கள் முன்னிலை நடைபெற்றன.
தினசரி காலை 10 மணி முதல் மாலை 7 மணி வரை 8 நாட்களுக்கு வாக்குச்சாவடி இயந்திரங்களின் செயல்பாடுகள் சரிபார்க்கப்பட்டன. அந்தவகையில் நேற்றுடன் 14 வாக்குச்சாவடி இயந்திரங்களின் சரிபார்ப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்தன. முடிவில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளிலோ அல்லது மாதிரி வாக்கெடுப்பு வாக்குகளிலோ எந்தவித முரண்பாடுகளும் இல்லை என்பதை மாவட்ட தேர்தல் அலுவலர் ஜி.எஸ்.சமீரன் உறுதிபடுத்தியுள்ளார்.
இதையடுத்து கொளத்தூர் தொகுதி வாக்குச்சாவடி இயந்திரங்களின் சரிபார்பு பணிகள் குறித்த ஆய்வறிக்கை முறைப்படி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





