காவல் துறையை வைத்து மிரட்டுவது ஜனநாயக நாட்டில் சரியானதா என்று மார்க்கண்டேயன் எம்எல்ஏ கேள்வி எழுப்பினார்.
கோவில்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட விளாத்திகுளம் தொகுதி திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 4-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதன்படி தினமும் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டிய நிலையில், சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்றதால் அவர் கையெழுத்திட வரவில்லை. இன்று அவர் தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு வந்து கையெழுத்திட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “ஜனநாயகத்தின் தூணாக இருப்பதில் ஒன்று சட்டமன்றம், மற்றொன்று நீதிமன்றம். சட்டமன்றத்தின் கதவுகள் அடைக்கப்படும் என்றபோது என்னால் தாங்க முடியவில்லை. அதற்கான எதிர்வினையை நான் ஆற்றிய போது கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காவல் துறையை வைத்து மிரட்டலாம் என நினைக்கின்றனர். இதெல்லாம் ஜனநாயக நாட்டில் நடைமுறையில் சரியானதா?
தவெகவினரின் தவறுகளை குறித்து வைத்து வருகிறோம். விரைவில் சமன் செய்வோம். முதல்வர் தேர்தல் வாக்குறுதியாக அளித்த திட்டங்கள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை. பத்திரிகையாளர்களுக்கு ஜனநாயகம் எங்கு மறுக்கப்படுகிறதோ அந்த இடம் விரைவில் வெற்றிடமாக மாறிவிடும். இது தான் உலக வரலாறு.
முதல்வர் குறித்து நான் பேசியது தொடர்பாக சட்டப்பேரவை உரிமை மீறல் குழுவுக்கு அனுப்பப்படும் என்று பேரவை தலைவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலயில் அவையின் நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினேன்” என்றார்.





