கல்கிசை துப்பாக்கிச் சூடு ; நால்வர் கைது

கல்கிசை, வட்டாரப்பல வீதி பகுதியில் கடந்த 07 ஆம் திகதி அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய  நான்கு சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (15) கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்தின் தெற்கு பிராந்திய பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கல்கிசை, வட்டாரப்பல வீதி  பகுதிக்கு கடந்த 07 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் வீடொன்றில் இருந்த இரண்டு நபர்கள் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 36 மற்றும் 20 வயதுடைய இருவர் உயிரிழந்திருந்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இருவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான “படோவிட்ட அசங்க” என்பவருடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் ஆவார்.

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் புளுமெண்டல், மட்டக்குளி மற்றும் கொஹுவலை ஆகிய பிரதேசங்களில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வெள்ளவத்தை, பொறள்ளை,களுபோவில மற்றும் தெஹிவளை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 17, 21, 27 மற்றும்  29 வயதுடையவர்கள் ஆவார்.

இதனையடுத்து, சந்தேக நபர்கள் நால்வரும் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.