இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க தேர்வாகி அசத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு, மாணவ மாணவியர்கள் கல்வியில் சிறந்து விளங்கிடும் வகையில் காலை உணவுத் திட்டம், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதற்கு பலனாக அனைத்து தரப்பு மாணவ, மாணவியர்களுக்கும் சிறப்பான கல்வி வழங்கப்பட்டு வருவதுடன், தேசிய அளவில் உயர்கல்வி சேர்க்கையிலும் இடம்பிடித்து வருகின்றனர். அந்த வரிசையில் மேலும் ஒரு மாணிக்கமாக தன்னை இணைத்திருக்கிறார் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த பழங்குடி இன மாணவி கவிதா.
தண்டராம்பட்டு அடுத்த உடையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜா பட்டு – பூங்கொடி தம்பதியின் மூன்று பிள்ளைகளில் இளையவர் கவிதா. ஏற்காடு பகுதியில் உள்ள ஏகலைவா உண்டு உறைவிட பள்ளியில் 10ஆம் வகுப்பு முடித்த கவிதா, புளியம்பட்டி பகுதியில் உள்ள ஏகலைவா அரசு மாதிரி உண்டு உறைவிட பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்த போது தந்தை ராஜா பட்டு காலமானார்.
குடும்பத்தில் வறுமை மேலும் நுழைவதற்கு இடம்தர விரும்பாத தாய் பூங்கொடி, பிள்ளைகளுக்காக குவைத் நாட்டிற்கு சென்று, வீட்டு வேலை செய்து வருகிறார்.


