அரசாங்கம் தெரிவித்துவரும் கல்வி மறுசீரமைப்பு திருத்தம் நல்லாட்சி அரசாங்க காலத்தில் கல்வி துறைசார் மேற்பார்வை குழுவில் ஆராயப்பட்டு தயாரிக்கப்பட்ட விடயங்களாகும். இதனை எந்த அரசாங்கம் முன்னெடுத்தாலும் அதற்கு ஆதரவளித்து, அறிவை இலக்காகக் காெண்ட கல்வி கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஆஷு மாரசிங்க தெரிவித்தார்.
அரசாங்கம் முன்னெடுத்துவரும் கல்வி மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
அரசாங்கம் ஆரம்பித்துள்ள கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கை புதிய விடயமல்ல. ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சராக இருந்த காலத்தில் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் வெள்ளை அறிக்கை ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்த பல சாதகமான விடயங்களும் இதில் உள்ளடங்கி இருக்கின்றன.
2015 நல்லாட்சி அரசாங்க காலத்தில் முதல் தடவையாக பாராளுமன்றத்தில் கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி தொடர்பான துறைசார் மேற்பார்வை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவின் தலைவராக நானே இருந்தேன். அதில் ஆளும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இணைந்து கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் ஆழமாகவும் விரிவாகவும் கலந்துரையாடி வந்தோம். தற்போது அரசாங்கத்தில் இருக்கும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, நிகால் கலப்பத்தி ஆகியோரும் அந்த குழுவில் இருந்தார்கள்.
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவாகி, பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாளில் நாங்கள் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் பிரேரணை ஒன்றை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தோம். அந்த அறிக்கையில் 2020 முதல் 2030 வரையான கல்வித்துறை தொடர்பான 10 வருட திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.
விஞ்ஞானம், கணிதம், தொழில்நுட்பம், பொறியியல் ஆகிய 4 பாடங்கள் தொடர்பில் இலங்கையில் கல்வி அமைப்பு எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது தொடர்பிலே அதில் கலந்துரையாடப்பட்டிருக்கிறது.
3 வருடங்கள் 300க்கும் மேற்பட்ட கல்வியியலாளர்களுடன் கலந்துரையாடி தயாரிக்கப்பட்ட அறிக்கையே பாராளுமன்றத்துக்கு அன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட கல்வித் திட்டத்துக்கு நாங்கள் அன்றும் எதிர்ப்பு தெரிவித்தோம். தற்போதும் அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறோம். பரீட்சையை அடிப்படையாகக் கொண்ட கல்வித் திட்டத்தினாலே மாணவர்கள் மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர்.
அதனால் புதிய விடயங்கள் தொடர்பில் சிந்திக்கின்ற மாணவர் சமூகத்தை கட்டியெழுப்புகின்ற விதத்திலே நாங்கள் எமது கல்வி மறுசீரமைப்பு வரைபை தயாரித்திருந்தாேம். இந்த வரைபுக்குள் வரலாறு மற்றும் அழகியற் பாடங்களை கற்றுக்கொள்ள முடியுமான வகையில் அதனை வேறாக்கினோம். மாறாக இந்த பாடங்களை நீக்கவில்லை. மாறாக விரும்பியவர்களுக்கு தெரிவு செய்துகொள்ள முடியுமான வகையில் நாங்கள் திட்டங்களை தயாரித்தோம்.
அத்துடன் பரீட்சைகள் அனைத்தையும் ஒரே தடவையில் நீக்காமல் படிப்படியாக அதனை குறைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்திருந்தோம். பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு அல்லாமல், அறிவை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறை தொடர்பாகவே நாங்கள் கலந்துரையாடி வந்தோம்.
தற்போது கல்வி அமைச்சரான பிரதமர் கல்வி மறுசீரமைப்பு தொடர்பில் தெரிவித்து வரும் விடயங்களின் அடிப்படை, எமது அறிக்கையில் இருந்து பெறப்பட்டவைகளாகும். அதனையிட்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். எந்த அரசாங்கமாக இருந்தாலும் நல்ல விடயங்களை செய்யும்போது அதற்கு நாங்கள் ஆதரவளிக்க வேண்டும். இல்லாவிட்டால் எமது கல்வி முறைமைகள், பரீட்சையை அடிப்படையாகக் கொண்டு செல்லும்போது எமது பி்ள்ளைகள் மன அழுத்தங்களுக்கு ஆளாகின்றனர்.
அதனால் அரசாங்கம் தெரிவித்துவரும் கல்வி மறுசீரமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்களை ஆராய்ந்து பார்த்து, அதற்கு ஆதரவளிக்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த விடயம் தொடர்ந்தும் இழுத்தடிக்கப்படும். அதனால் எமது எதிர்கால மாணவர் சமூகமே பாதிக்கப்படப்போகின்றனர் என்றார்.


