இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதி என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கும் பிரித்தானியா தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமென அந்நாட்டு அமைச்சர் கத்தரின் வெஸ்ட் சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் உறுதியளித்துள்ளார்.
இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு திங்கட்கிழமை (27) நாட்டை வந்தடைந்த பிரித்தானியாவின் இந்தோ – பசுபிக் பிராந்திய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் கத்தரின் வெஸ்ட் செவ்வாய்க்கிழமை (28) யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்தார்.
இதன்போது இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்ரிக்குடன் இணைந்து நடாத்திய சந்திப்புக்களின் ஓரங்கமாக கத்தரின் வெஸ்ட்டுக்கும், யாழ்ப்பாணத்தை தளமாக கொண்டியங்கிவரும் சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் புத்திஜீவிகளுக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (28) இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள், தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, வட-கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி, சிவில் சமூக செயற்பாடுகளுக்கான இடைவெளி உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
அதனையடுத்து இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும், மனித உரிமைகள் மற்றும் நிலைமாறுகால நீதியை உறுதி செய்வதற்கும் அவசியமான ஒத்துழைப்பினை பிரித்தானியா தொடர்ந்து வழங்கும் என அமைச்சர் கத்தரின் வெஸ்ட் யாழ் மைய சிவில் சமூக பிரதிநிதிகளிடம் உறுதியளித்தார்.
அதேவேளை கொழும்பை தளமாகக்கொண்டியங்கிவரும் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை திங்களன்று (27) கொழும்பில் சந்தித்த அமைச்சர் கத்தரின் வெஸ்ட், இலங்கையில் ஜனநாயகம், மனித உரிமைகள், நல்லிணக்கம் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானியா தொடர்ந்து ஆதரவளிக்கும் என உத்தரவாதமளித்தார்.
இச்சந்திப்பின் போது நாட்டின் சமகால அரசியல் நிலைவரம், புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டத்திருத்தம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.





