இலங்கை, இந்திய அரசாங்கங்கள் தமக்குள் நிலுவையில் உள்ள மூலோபாய சிக்கல்களை குறுகிய காலத்துக்குள் இறுதி செய்ய வேண்டும். அத்துடன் பொருளாதாரத்தில் முன்னோக்கிய பயணத்துக்கான முன்மொழிவுகளை செயற்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒப்புக்கொள்ள வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் சமாதான முன்னெடுப்புக்களே 2002 ஜனவரியில் விடுதலைப் புலிகளுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு வழிவகுத்தன. அதற்கான பேச்சுவார்த்தைகளின்போது அவர் இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலியுறுத்தியதோடு, சமாதான முன்னெடுப்புகளுக்கான நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்தார் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியாவின் மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவேந்தல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (27) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,
2001 டிசம்பரில் நான் இரண்டாவது முறையாக பிரதமரானபோது இலங்கை கடுமையான அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது. பிரதான துறைமுகம் மற்றும் விமான நிலையம் மீதான தாக்குதல்களால் கப்பல்களும் விமானங்களும் இலங்கைக்கு வருவதைத் தவிர்த்தன.
இது இலங்கையின் பொருளாதாரம் மேலும் சுருங்குவதற்கு வழிவகுத்தது. இதனால் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.
நான் பிரதமராக பதவியேற்றுக்கொண்டவுடன் உடனடியாக டில்லி சென்று நிலைமையை அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் விளக்கினேன். அவரும் அந்த சந்தர்ப்பத்தில் போர் நிறுத்தத்தின் அவசியத்தையும் ஒப்புக்கொண்டார். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைத் தடுப்பதற்கும் அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுத்துச் செல்வதற்கும் இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவு தேவைப்பட்டது.
சமாதான முன்னெடுப்புகளுக்குத் தலைமை தாங்கிய நட்பு நாடுகளின் கலந்துரையாடல்களின் முன்னேற்றம் குறித்து நான் வாஜ்பாயிடம் தெரிவித்திருந்தேன். அப்போது அவர், ‘விக்கிரமசிங்க, இது இந்தியாவில் மிகவும் உணர்ச்சிகரமான பிரச்சினை. என்னால் சோனியா காந்தியை விட ஒரு படி மேல் தான் சிந்திக்க முடியும். எனவே இது தொடர்பில் நீங்கள் அவருக்கும் விளக்கி அவரையும் சமாதானப்படுத்த வேண்டும். அதன் பின்னர் நானும் ஒத்துழைப்புக்களை வழங்குகின்றேன்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதிர்ஷ்டவசமாக சோனியா காந்தி இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியைத் தீர்ப்பதற்கு ஒத்துழைத்தார்.
இந்திய – இலங்கை உறவுகளை மேம்படுத்துவதற்கு வேறு வழிகள் இருந்தன. 2001ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி அவரது பிறந்தநாளன்று இடம்பெற்ற சந்திப்பானது இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான உறவுக்கு அடித்தளமாக அமைத்தது. உண்மையில், வாஜ்பாய் இலங்கைக்கு உதவ முன்வந்தமையை அன்று உறுதி செய்தார்.
அதற்கமைய அன்றைய தினம் இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது.
இலங்கையில் சமாதான முன்னெடுப்புகளுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு அதன் ஆதரவையும் உறுதிப்படுத்தியது. இதன் பலனாக 2002 ஜனவரியில் விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட முடிந்தது.
2002 மற்றும் 2003 இந்திய – இலங்கை உறவுகளுக்கு முக்கியமான ஆண்டுகளாகும். விடுதலைப் புலிகளுடனான மோதலின் இறுதிக்கட்டத்தில் இருந்ததால் நாம் மறுமுனைகளிலும் குறிப்பாக பொருளாதாரம், இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவேண்டிய அவசியம் என்பதை ஒப்புக்கொண்டோம்.
இரு தரப்பிலும் அடுத்தடுத்து வந்த அனைத்து அரசாங்கங்களும் பேச்சுவார்த்தைகளைத் தொடர ஒரே வடிவத்தைப் பயன்படுத்தின. அந்த வகையில் பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு சகல ஒத்துழைப்புக்களும் கிடைத்தன.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் 2000ஆம் ஆண்டுகளில் உச்சத்தில் இருந்தது. கடற்புலிகளின் கடல்சார் நடவடிக்கைகளில் பிரபாகரன் அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் வாஜ்பாயும் நானும் ஒரு உடன்படிக்கைக்கு வந்தோம். எந்த ஒரு அரசு சார்பற்ற தரப்புக்கும் எமது கடல் பகுதியில் செயல்பட அனுமதிக்க மாட்டோம் என்பதே அந்த இணக்கப்பாடாகும். கடற்புலிகளின் செயற்பாடுகளை நடுநிலையாக்கி பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கு இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் விளைவாக அது அமைந்தது.
2003ஆம் ஆண்டளவில், நிலைமை மூலோபாய ரீதியாக, பொருளாதார ரீதியாக மற்றும் சர்வதேச ரீதியாக இலங்கைக்கு சாதகமாக மாறியது. சமாதானப் பேச்சுவார்த்தையில் தன்னால் வெற்றிபெற முடியாது என்பது பிரபாகரனுக்குத் தெரியும். அதனால் அமைதிப் பேச்சுவார்த்தையை புறக்கணிக்கத் தொடங்கினார். இந்த முக்கியமான கட்டத்தில், இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளுக்கு விடுதலைப் புலிகளின் பதிலை வலியுறுத்துவதன் மூலம் இந்தியா எங்களுக்கு ஆதரவளித்தது. அன்றிலிருந்து 2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரை இந்தியா எமக்கு ஆதரவளித்தது.
நாம் எதிர்க்கட்சியாக செயற்பட்ட நாட்களில் நானும் வாஜ்பாயும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு அப்பால் இரு நாடுகளுக்கும் இடையே நெருக்கமான பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினோம்.
அரசாங்கத்தில் விவசாயம், மின்சாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளுக்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் இந்த பேச்சுவார்த்தைகளை செயல்படுத்த முடிந்தது.
போர்நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தவுடன், பொருளாதாரத்தின் மீது எங்கள் கவனம் திரும்பியது. இதிலும் நானும் வாஜ்பாயும் ஒரே பக்கமிருந்து செயற்பட்டோம். முதன்முறையாக, இரு அரசாங்கங்களும் தங்கள் பொருளாதாரங்களை மேலும் தாராளமயமாக்க உறுதிபூண்டன. சேவைத்துறையை உள்ளடக்கிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் அதற்கு அப்பால் ஒரு பணிக்குழுவை அமைப்பதற்கான ஒப்பந்தமும் எட்டப்பட்டது.
ஒக்டோபர் 2003இல் நாம் எமது இருதரப்பு சந்திப்பை நடத்தியபோது, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒரு விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தமாக மாறியது.
நாம் 2004ஆம் ஆண்டளவில் பேச்சுவார்த்தைகளை தொடங்கி அவற்றை நிறைவு செய்ய தீர்மானித்தோம். ஆனால் அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் பதவியில் இருந்து வெளியேறினோம். இருந்தபோதிலும், இரு நாடுகளும் இலங்கையில் இந்திய சுற்றுலாவை மேம்படுத்துவதற்கு ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானங்களை அதிகரிப்பது மற்றும் இந்தியன் எயார்லைன்ஸ் தினசரி சேவையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
நாங்கள் இருவரும் இந்திய இலங்கை உறவுகளை ஒரு புதிய நிலைக்கு கொண்டு சென்றோம். முதலாவதாக, இந்திய எண்ணெயை இலங்கை சந்தைக்குள் நுழைய அனுமதிப்பது மற்றும் திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கிகளை சேமிப்பிற்காக பயன்படுத்துதல் மற்றும் திருகோணமலையில் ஒரு நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை நிறுவ ஒப்புக்கொண்டதன் மூலம் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
இந்திய – இலங்கை இணைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்துக்கு பதிலளிக்கும் வகையில், கொழும்புக்கும் தமிழ்நாட்டுக்கும் நில அணுகலை வழங்குவதற்காக – இந்தியாவின் தென்கோடி முனைக்கும் இலங்கையின் உச்சமான பகுதிக்கும் இடையே தரைப்பாலம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வை மேற்கொள்ள நாங்கள் ஒப்புக்கொண்டோம். இந்த திட்டத்தின் இறுதி நோக்கம் இலங்கையை ஒரு பிராந்திய மற்றும் கேந்திர மையமாக மாற்றுவதாகும்.
2040இல் இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது, தமிழகத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஒரு டிரில்லியன் டொலர்களை எட்டியிருக்கும். இதுவே இலங்கை ஒரு தேசமாக இணைக்கப்படவேண்டிய அதிகார மையமாகும். இவையனைத்தும் இலங்கை ஏற்றுமதிக்கான பெரிய சந்தைகளை நிறுவுவதுடன், வேகமாக வளரும் என எதிர்பார்க்கப்படும் இரண்டு புதிய பொருளாதாரத் துறைகளை உருவாக்கும்.
முன்னர் குறிப்பிட்டது போல், இலங்கை தன்னை ஒரு பிராந்திய தளவாட மையமாக நிலைநிறுத்திக் கொண்டால், பிராந்தியத்தின் இந்த அபிவிருத்திகளின் பயனாளியாக நாம் மாற முடியும் என்றார்.