கல்கிஸ்ஸை, வெள்ளவத்தை புகையிரத நிலையங்களில் நிறுத்தக்கூடிய வகையில் வடக்குக்கான புகையிரத சேவை!

வடக்குக்கு காலை வேளையில் புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களில் கல்கிஸ்ஸை மற்றும் வெள்ளவத்தை ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்தக்கூடிய வகையில் வடக்குக்கு புகையிரத சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளர் தம்மிக ஜயசுந்தர தெரிவித்தார்.

புகையிரத திணைக்களத்தின் தலைமையகத்தில் திங்கட்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

வடக்கு மற்றும் மலையகத்துக்கான புகையிரத சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய எதிர்வரும் வியாழக்கிழமை 31ஆம் திகதி முதல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையம் வரை பெப்ரவரி மாதம் 1ஆம் திகதி முதல் காங்கேசன்துறை புகையிரத நிலையம் முதல் கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் வரை இரவு தபால் புகையிரதம் சேவையில் ஈடுபடும்.

இத்தினங்களில் இரவு 8 மணியளவில் கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் புகையிரதம் அதிகாலை 4.35 மணியளவில் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தை சென்றடையும். அதேபோல் இரவு 8 மணிக்கு காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து புறப்படும் புகையிரதம் அதிகாலை 4.45 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை சென்றடையும்.

மலைநாட்டுக்கான புகையிரத சேவை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளது. தேசிய மற்றும்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் கோரிக்கைக்கு அமைய மலைநாட்டுக்கான புகையிரத சேவையில் மேலதிகமாக புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளன.

எல்ல ஒடிசி – கொழும்பு புகையிரதம் கொழும்பு கோட்டை – பதுளை வரையிலும் மேலதிகமாக 10 புகையிரத பயணச் சேவைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் விசேட புகையிரதங்கள் சேவையில் ஈடுபடுத்தப்படும்.

வடக்குக்கு காலை வேளையில் புகையிரத சேவையை ஆரம்பிக்குமாறு பல்வேறு தரப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதற்கமைய எதிர்வரும் இரண்டு வாரங்களில் கல்கிஸ்ஸை மற்றும் வெள்ளவத்தை ஆகிய புகையிரத நிலையங்களில் நிறுத்த கூடிய வகையில் வடக்குக்கு புகையிரத சேவையை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.

புகையிரத என்ஜின் பற்றாக்குறை காரணமாகவே புகையிரத சேவைகள் தற்காலிகமாக மட்டுப்படுத்தப்பட்டன. எதிர்வரும்  காலப்பகுதியில் சேவைகளை விரிவுபடுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. புகையிரத இ-டிக்கெட் சேவையில் இடம்பெற்ற மோசடி தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.