கண்டி, புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட களுகலவத்தை பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று வியாழக்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக புஸ்ஸல்லாவை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் புஸ்ஸல்லாவை, களுகலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.
இவர் தேயிலை தோட்டத்தில் தேயிலைக் கொழுந்துகளை பறித்து கொண்டிருந்த போது குளவி கொட்டுக்கு இலக்காகி வஹூகபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தோட்டத் தொழிலாளி குளவி கொட்டுக்கு இலக்காகிய போது அருகிலிருந்த வீடொன்றுக்குள் ஓடிச் சென்றுள்ள நிலையில், அந்த வீட்டிலிருந்த பெண்ணொருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகி வஹூகபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.





