2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான ஆகாயவழிப் போக்குவரத்து சேவைகளை வழங்கியதன் மூலம் இலங்கை விமானப்படைக்கு 56 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக வருமானம் ஈட்டப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.
இலங்கை விமானப்படையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் கோரப்பட்ட தகவல்களுக்கு அமைவாக ஆங்கில ஊடகமொன்று இவ்விடயத்தினை வெளிப்படுத்தியுள்ளது.
குறித்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் பிரகாரம், 2024 ஆகஸ்ட் 15 அன்று வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதிலிருந்து 2024 செப்டெம்பர் 18 அன்று தேர்தல் பிரசாரங்கள் நிறைவடையும் வரையில் இலங்கை விமானப்படையினால் 34 நாட்கள் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான ஆகாயவழிப் போக்குவரத்துக்கான சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 23தடவைகள் போக்குவரத்து சேவையைப் பெற்றுக்கொண்டுள்ளதோடு அதற்காக 29.09மில்லியன் ரூபா பெறப்பட்டுள்ளது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் 11 தடவைகள் சேவை பெறப்பட்டுள்ளதோடு அதற்காக 20.75 மில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளது,
நமல் ராஜபக்ஷ இரண்டு தடவைகள் சேவையைப் பெற்றுள்ளதோடு 1.44 மில்லியன் ரூபா அறவிடப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு சேவையைப் பெற்றுள்ளதோடு அதற்காக 2.68 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.
அதேநேரத்தில் முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஒருசேவையைப் பெற்றுக்கொண்டதோடு அதற்காக 1.24 மில்லியன் ரூபாவையும் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க ஒரு சேவையைப் பெற்றுள்ளதோடு அதற்காக 1.6 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளார்.
இருப்பினும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரும் அதன் தலைவருமான தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பிரசாரத்தின் போது ஆகாயவழிப் போக்குவரத்து சேவையைப் பயன்படுத்தவில்லை.
இதேநேரம், தேர்தல் காலத்தில் ஆகாயவழிப் போக்குவரத்துக்காக 42,000 லிற்றர் எரிபொருள் தேவைப்பட்டதாகவும் அதற்காக 9 மில்லியன் ரூபா செலவாகியதாகவும் இலங்கை விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.





