டிஜிட்டல் மயமாக்கல் என்ற போர்வையில் அரசாங்கம் இலங்கை மக்களின் உயிரியல் தரவுகளை சேகரித்தல் தொடர்பான பகிரங்க விவாதத்திற்கு வருமாறு டிஜிட்டல் அமைச்சர், டிஜிட்டல் பிரதி அமைச்சர் உள்ளிட்ட அரசாங்கத்திற்கு மக்கள் போராட்டக் முன்னணி அழைப்பு விடுத்துள்ளது.
இது குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கம் பதில் வழங்க வேண்டும் எனவும் இதுபோன்ற விடயங்களை திருட்டுத்தனமாகவும் மறைத்தும் செய்வதற்கு ஒருபோதும் அனுமதி வழங்க முடியாது எனவும் முன்னிலை சோசலிஸக்கட்சியின் கல்விச்செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்தார்.
கொழும்பில் இன்று புதன்கிழமை (05) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது
மக்களின் உயிரியல் தரவுகளை சேகரித்தல் குறித்து எமது கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும். நாட்டை டிஜிட்டல் மயமாக்கும் போதும் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் போதும் உயிரியல் தரவுகளின் அவசியம் எதற்கு? டிஜிட்டல் மயமாக்கல் என்பது வேறு.உயிரியல் தரவுகள் என்பது வேறாகும்.
எனவே இதில் இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். உதாரணமாக இத்தாலியில் டிஜிட்டல் அடையாள அட்டை பாவனை உள்ளது. ஆனால் அந்த அரசாங்கம் அந்த தரவுகளை கோரவில்லை.அவ்வாறாயின் அரசாங்கம் எவ்வாறான சந்தர்ப்பங்களில் இந்தத் தரவுகளைப் பயன்படுத்தும் என்பதைக்கூற வேண்டும்?
குறிப்பாக நவீன தொழில்நுட்பத்தின் முதல்நிலையில் இருப்பவர்கள் எனக்கூறிக்கொள்ளும் அமெரிக்கா தென்கொரியாவிலும் எமக்குத் தற்போது டிஜிட்டல் மயமாக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகக்கூறும் இந்தியாவிலும் கடந்தகாலங்களில் தரவுக்கட்டமைப்பை திருடப்பட்டது.
எமது நாட்டிலும் அண்மையில் அரச அச்சகத்திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையப்பக்கங்கள் ஊடுறவப்பட்டது. எனவே இந்தத் தரவுகள் எதிர்காலத்தில் திருடப்படாது என்பதற்கு அரசாங்கம் வழங்கும் உத்தரவாதம் என்ன?
அத்துடன் இந்தத்திட்டத்தை எந்த இந்திய நிறுவனம் மேற்கொள்ள இருக்கிறது?அந்த நிறுவனம் எவ்வாறு தெரிவு செய்யப்பட்டது? அந்த நிறுவனத்தைப் பற்றிய தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதா? குறித்த இந்திய நிறுவனத்தின் தலையீடு எந்த மட்டத்தில் இருக்கும்? இந்த தரவுத்தள கட்டமைக்குள் மாற்று முறையை பயன்படுத்தி குறித்த நிறுலனம் ஊடுரூவதை தடுப்பதற்கான மாற்றுவழி உள்ளதா? அவ்வாறாயின் அதனை தடுக்க வழி என்ன? இந்ததிட்டத்தில் இலங்கையில் எந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது? அந்த நிறுவனம் எந்த முறையில் தெரிவு செய்யப்பட்டது? இடைப்பட்ட காலப்பகுதியில் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டால் இந்திய நிறுவனம் மீண்டும் அழைக்கப்படுமா? அந்த சந்தர்ப்பத்தில் தரவுகள் திருடப்படமாட்டது என்பதற்கு உத்தரவாதம் என்ன என இதுபோன்ற பல பிரச்ச்சினைகளுக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டும்.
இது குறித்து விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மற்றும் பிரதி அமைச்சருக்கும் எமது கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு சவால் விடுக்கிறோம்.
இருவரில் ஒருவர் எமது கேள்விகளுக்கு பதில் வழங்க முடியும். இது பற்றி பேசும் அமைச்சர்களை அழைத்து வரலாம்.விசேட நிபுணர்கள் எனக் கூறிக்கொள்ளும் தரப்பினரையும் அழைக்கலாம். நாங்கள் தயார்.எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் பின்வாங்கக்கூடாது.மக்களுக்கு உண்மைகளை கூற வேண்டும்.
இதுபோன்ற விடயங்களை திருட்டுத்தனமாகவும் மறைத்தும் செய்வதற்கு எம்மால் அனுமதிக்க முடியாது. எமது அழைப்பை புறக்கணித்து உண்மைகளை மறைக்க அரசாங்கம் முயற்சித்தால் மக்கள் உயிரியல் தரவுகளை வழங்கமாட்டார்கள் என்றார்.





