தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர கண்டியில் தெரிவித்துள்ளார்.

அந்த நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை உயர்த்தும் நோக்கில் புதிய வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஓய்வுபெற்ற ஆயுதப்படை சங்கத்தின் கண்டி மாவட்ட மாநாடு கண்டி தபாலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரையாற்றிய , பிரதி பாதுகாப்பு அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர,

ஒரு பொலிஸ்  அதிகாரி அருகில் இருக்கும்போது பாதுகாப்பு குறித்து நாம் உணரும் நம்பிக்கை, தனியார் பாதுகாப்பு நிறுவன ஊழியர் ஒருவர் அருகில் இருக்கும்போது அதே போல் உணர்வதில்லை அந்த நிலை மாற வேண்டும்.

தனியார் பாதுகாப்புப் பணியாளர்களின் தொழில்முறை நிலை, ஒழுக்க நிலை   மற்றும் கண்ணியத்தைப் பேணக்கூடிய நிலைக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.

பெரிய, நடுத்தர மற்றும் சிறிய அளவில் பாதுகாப்பு சேவை நிறுவனங்களை நடத்தும் அனைவரையும் அழைத்து, தொழிலாளர் துறை, நிதி அமைச்சு , சட்ட திணைக்களம், பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொலிசார்  ஆகியோர் இணைந்த இணைந்து பாதுகாப்பு சேவை நிறுவனங்களை ஸ்தாபிப்பதற்கு விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் பாதுகாப்பு சேவை நிறுவனங்களில் பணிபுரிபவர்களில் பெரும்பான்மையானவர்கள் முன்னாள் இராணுவ வீரர்கள்  மற்றும் பொலிஸார் ஆவர், அவர்களுக்குக் கிடைக்கும் ஊதியம், கொடுப்பனவுகள் மற்றும் வசதிகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அதற்கான ஒழுங்குபடுத்தும் பணிகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருக்கின்றன.

மேலும், புதிய அரசு அமைப்பதற்கு முன் அரசு நிர்வாகத்தில் காணப்பட்ட குழப்ப நிலமைகளை தற்பொழுது மேற்கொண்டுவரும் நிர்வாக பணிகளின் மூலம்  அனைத்து விடயங்களையும் அறியமுடிகிறது.

அரசியல் வாதிகளின் தேவையில்லாத  தொடர்புகளினால்  பெரும்பாலான அரச உத்தியோகத்தர்கள்   வினைத்திறன் அற்றவர்களாகி புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் அரசியல் கலாசாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை உணர்ந்து தற்போது மாறி வருகின்றனர்.

தற்பொழுது ஓய்வுபெற்ற மாவீரர்களின் அனைத்துப் பிரச்சினைகளும் இனங்காணப்பட்டுள்ளதாகவும், அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம்.

இந்நிகழ்வில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் கலாநிதி பிரசன்ன குணசேன, ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் பெட் செனவிரத்ன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.